கோப்புப்படம்
கோப்புப்படம்ANI

விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் சர்ச்சை: நிர்மலா சீதாராமனுக்கு விஜய் பதில்

"மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?"
Published on

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்புவதாக தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது, தமிழ் மொழி குறித்து தந்தை பெரியார் வைத்த விமர்சனங்கள் எனச் சிலவற்றைப் பட்டியலிட்டுப் பேசினார். நாகரிகமற்றவர்கள் என தர்மேந்திர பிரதான் கூறியதற்குப் பொங்கி எழுந்தவர்கள் தான் தமிழை இப்படி விமர்சித்துள்ளவரை திராவிடத்தின் அடையாளம் எனக் கொண்டாடுகிறார்கள் என நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய், "ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?!" என்று கூறியுள்ளார்.

இதுதொடர்புடைய எக்ஸ் தளப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:

"பெரியார், தமிழைக் காட்டுமிராண்டி மொழி எனச் சொன்னார் என்பதற்காக நிஜமாகவே ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் அவர்களுக்கு வருத்தமா? அப்படி எனில், மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாட்டில் திணிக்காமல் இருக்கலாமே?

முரண்களைக் கடந்து எங்கள் கொள்கைத் தலைவரான பெரியாரைத் தமிழ்நாடு இன்றும் ஏன் போற்றுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!?

குழந்தைத் திருமணத்தை எதிர்த்ததால், விதவை மறுமணத்தை ஆதரித்ததால், சாதிக் கொடுமைகளை எதிர்த்ததால் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், இன்றைய நிலையுடன் பொருத்திப் பார்த்துச் சொன்னால், இன்று எல்லோரும் கேட்கும் சமூக நீதிக்கான வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை நூறாண்டுகளுக்கு முன்பே கேட்டவர் என இன்னும் அவரைப் போற்றுவதற்கான பட்டியல் நீண்டுகொண்டே செல்லும்.

ஒன்றிய அரசின் மீதான விமர்சனங்களை மறைப்பதற்குக் கூடப் பெரியார் தொடர்பான சர்ச்சையைக் கிளப்பும் அளவுக்கு வலுவானவராக இன்றும் பெரியார் இருக்கிறாரே... இது போதாதா அவரைத் தமிழ்நாடு ஏன் இன்றும் மாலை மரியாதை செய்து போற்றுகிறது என்பதற்கு?!

பெரியார் போற்றுதும்!

பெரியார் சிந்தனை போற்றுதும்!" என்று விஜய் பதிவிட்டுள்ளார்.

logo
Kizhakku News
kizhakkunews.in