

இளைஞர்கள் எக்கேடு கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்று ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையும் காட்டுகிறது என்று திருத்தணி சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த திருத்தணி அருகே சுராஜ் என்ற புலம்பெயர்ந்த தொழிலாளி மீது சிறுவர்கள் கடுமையான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. இதையடுத்து அதில் தொடர்புடைய சிறுவர்கள் நான்கு பேரைக் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.
ரீல்ஸ் போடுவதற்காக தாக்குதல்
முதற்கட்ட விசாரணையில், அந்தச் சிறுவர்கள் போதையில் இருந்ததும், ரீல்ஸ் எடுப்பதற்காக ரயிலில் கத்தியுடன் வந்ததும் தெரிய வந்துள்ளது. ரயிலில் ஒடிஷாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளியான சுராஜுக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. திருத்தணி ரயில் நிலையத்தை அடையும் வரை வாக்குவாதம் தொடர்ந்த நிலையில், சுராஜை திருத்தணி பழைய ரயில்வே குடியிருப்புக்கு அழைத்துச் சென்ற நால்வரும் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் தப்பியோடியதை அடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த சுராஜை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரைத் திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
புலம்பெயர்ந்த தொழிலாளரைச் சிறுவர்கள் தாக்கிய காணொளி இணையத்தில் வெளியானது. இது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பிய நிலையில், இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை போன்ற அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட பலர் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
விஜய் கண்டனம்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“சென்னையிலிருந்து திருத்தணி சென்ற ரயிலில் இளைஞர்கள் சிலர், நேற்று மற்றொரு இளைஞரைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம், தமிழ்நாடு எத்தகைய அபாயகரமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறது என்ற அச்சத்தையும் அதிர்வலைகளையும் மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இளைஞர்கள் தவறான பாதையில் செல்வதை அரசு முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கவில்லை. இளைஞர்கள் எக்கேடு் கெட்டு வீணாய்ப் போனால் நமக்கென்ன என்ற ஆளும் அரசின் அலட்சியத்தையும் பொறுப்பின்மையையுமே இந்தச் சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, போதைப் பொருள்களால் இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்து வருகிறது. தமிழ்நாட்டில் இளைஞர்களை நல்வழிப் பாதையில் கொண்டு செல்லும் திட்டங்கள் இல்லை. இளைஞர்கள் நல்ல முறையில் கல்வி கற்க ஏற்ற சூழல் இல்லை. தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் இல்லை. புத்தாக்கம் இல்லை. புதிய முயற்சிகளுக்கு ஊக்கம் இல்லை. இவை எவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்காமல், யாருக்காக இந்த ஆட்சியை நடத்துகிறீர்கள்? எஞ்சியிருக்கக் கூடிய ஆட்சிக் காலத்திலாவது போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கபட நாடக அரசை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
TVK Leader Vijay condemned Tiruttani incident, saying that it shows the indifference and irresponsibility of the ruling government over youth welfare.