பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு | TVK Vijay | Archana Patnaik |

தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும்...
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
2 min read

தவெக பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமைச் செயலகத்தில் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை பெரம்பூர் உட்பட ஐந்து இடங்களில் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது.

பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு

தவெக பிரசாரத்திற்காக பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள இடத்திற்கு அனுமதி வழங்கக் கோரி சுவிதா செயலி மூலம் தவெகவினர் விண்ணப்பித்துள்ளனர். அப்போது நிகழ்ச்சிக்கு தொண்டர்கள் 3000 பேர் வர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தேர்தல் நடத்தும் அதிகாரி கீதா பரிசீலித்த நிலையில், 3000 பேர் வர அந்த இடத்தில் வசதி போதாது எனக்கூறி பிரசாரத்துக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார். மேலும் அப்பகுதியில் திடீரென்று பள்ளம் தோண்டப்பட்டு மாநகராட்சிப் பணிகள் தொடங்கப்பட்டதாகவும் தெரிகிறது.

திமுகவை குற்றம் சாட்டிய விஜய்

இதனை அடுத்து, தவெக பிரசாரத்திற்கு சென்னை மாநகரக் காவல்துறையும் அதிகாரிகளும் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று குற்றம்சாட்டி அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (மார்ச் 27) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நான் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது அனுமதி மறுப்பதும் தொடர்கதையாகி வருகிறது” என்று கூறியிருந்தார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

இதற்கு இன்று காலை விளக்கமளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “அரசியல் கூட்டங்களுக்குத் தற்போது யார் அனுமதி அளிக்க வேண்டும் என்பதை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் காலத்தில் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுவிதா செயலி மூலமாக 48 மணி நேரத்திற்கு முன் என்ன நிகழ்ச்சி, எங்கே நடத்தப்போகிறோம், எத்தனை பேர் கலந்துகொள்வார்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். இதற்காக யாரும் தேர்தல் ஆணையத்தைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. காவல்துறையையோ வேறு எந்த அரசு அமைப்பையோ நாட வேண்டிய அவசியம் இல்லை. சுவிதா செயலியில் பதிவு செய்தாலே 48 மணி நேரத்திற்குள் கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிடும்” என்று கூறியிருந்தார்.

தேர்தல் அதிகாரியை சந்தித்த விஜய்

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக புகார் அளிக்க தவெக தலைவர் விஜய் இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்தார். அங்கு தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்த விஜய், மனு ஒன்றை அளித்துள்ளர். அதில், அதிகாரிகள் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளதாகவும், தலைமைச் செயலாளர், சென்னை காவல் ஆணையர், ஏடிஜிபி, நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட 10 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும், பிரசாரம் செய்ய தனக்கு அனுமதி மறுக்கப்படுவதற்காக 10 காரணங்களைப் பட்டியலிட்டு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகம் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in