

புதுச்சேரி அரசைப் பார்த்து திமுக அரசு கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரும் தேர்தலில் மக்கள் கற்றுக் கொடுப்பார்கள் என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.
புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜயின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு 5000 பேர் மட்டுமே கியூஆர் கோட் வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மக்கள் பலர் திரண்டனர். இதனால் தொடக்கத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், பிரசார வாகனத்தின் மேல் ஏறி கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-
“மத்திய அரசுக்குத்தான் தமிழ்நாடு தனி மாநிலம், புதுச்சேரி தனி யூனியன் பிரதேசம் என்று தனி தனி என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால் நமக்கு அப்படி இல்லை. நாம் வேறு வேறு இல்லை. நாம் அனைவரும் ஒன்றுதான். நாம் அனைவரும் சொந்தம்தான். நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது ஏற்படுகிற பாச உணர்வு இருந்துவிட்டால் போதும் வேறு எதுவும் தேவையில்லை. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா என எங்கிருந்தாலும் அனைவரும் நம் உறவுதான். அனைவரும் நம் உயிர்தான்.
புதுச்சேரி என்றதும் மணக்குள விநாயகர் கோயில், அரவிந்தர் ஆசிரமம், வில்லியனூர் மாதா கோயில் ஆகியவை நினைவுக்கு வருகிறது. அதுமட்டுமன்றி மகாகவி பாரதியார் இருந்த மண் இது. பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த மண் இது. அரசியலில் 1977-ல் எம்ஜிஆர் தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தார். ஆனால் அதற்கு முன் 1974-ல் புதுச்சேரியில் அவர் ஆட்சி அமைத்தார். அதனால்தான் நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரைத் தமிழ்நாட்டில் தவற விட்டுவிடாதீர்கள் என்று நம்மை எச்சரித்தது புதுச்சேரிதான்.
தமிழ்நாட்டைப் போலவே புதுச்சேரி மக்களும் கடந்த 30 ஆண்டுகளாக என்னைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள். விஜய் தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் குரல் கொடுப்பான் என்று நினைக்காதீர்கள். என் கனவிலும் கூட நான் புதுச்சேரி மக்களும் சேர்த்தே குரல் கொடுப்பேன். அதனால்தான் புதுச்சேரியின் பிரச்னைகளை இன்று பேச வந்திருக்கிறேன்.
புதுச்சேரி அரசு தமிழ்நாட்டின் திமுக அரசு மாதிரி கிடையாது. வேறு ஒரு அரசியல் கட்சி நடத்தும் நிகழ்ச்சியாகவே இருந்தாலும், அதற்குத் தன்னெழுச்சியாக வரும் மக்களுக்கு பாரபட்சமின்றி பாதுகாப்பு வழங்குகிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும், முதலமைச்சருக்கும் என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைப் பார்த்தாவது திமுக அரசு கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும். அப்படிக் கற்றுக்கொள்ளவில்லை என்றாலும் வரும் தேர்தலில் 100% கற்றுக் கொள்வார்கள். அதை நம் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
புதுச்சேரியின் அரசுடன் கூட்டணியில் இருந்தாலும் மத்திய பாஜக அரசு புதுச்சேரியைக் கண்டுகொள்ளவில்லை என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கவில்லை. அதைக் கேட்டு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு மத்திய பாஜக அரசுக்கு கோரிக்கை வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். புதுச்சேரி - காரைக்கால் பகுதிகளில் மூடப்பட்ட 5 மில்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு எதுவும் செய்யவில்லை. இங்கே ஒரு ஐடி கம்பெனி திறக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இல்லை. இங்கே ஒரு அமைச்சரை ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கி, வேறொருவரை நியமித்து 200 நாள்கள் ஆகிவிட்டது. அவருக்கு இலாகா தரவில்லை. இது சிறுபான்மை மக்களை அவமானப்படுத்துகிறது. மாஹே, ஏனாம், காரைக்கால் பகுதிகளில் வளர்ச்சியில்லை என்று மக்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். காரைக்காலை அடியோடு கைவிட்டுவிட்டார்கள்.
சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் பார்க்கிங் வசதி இல்லை. கழிப்பறை வசதி இல்லை. இவற்றை மேம்படுத்த வேண்டும். புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் ரயில் திட்டம் வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை. அதை நிறைவேற்றவில்லை. புதுச்சேரி மக்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும். திமுகவை நம்பாதீர்கள். திமுகவுக்கு நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் வேலையே. நான் சொன்ன கோரிக்கைகளைத் தீர்த்து வைக்க இந்த அரசுக்கு தவெக உண்மையாக துணை நிற்கிறது. தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியையும் ஒதுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.
20 லட்சம் மக்கள் வாழும் மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை. மாநிலங்களுக்கான நிதிப்பகிர்தல் அடிப்படையிலும், யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப்பகிர்தல் அடிப்படையிலும் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரிக்கு தோராயமாகவே மத்திய அரசு நிதியை ஒதுக்குகிறது. அந்த நிதியும் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய திட்டங்களுக்கும் சென்றுவிடுகிறது. இதனால் வெளிச் சந்தைகளிலும் கடன் பத்திரங்கள் மூலம் கடன் வாங்குகிறது புதுச்சேரி. போதிய நிதி வரவு இல்லாததால் வெளியில் கடன் வாங்க வேண்டியாதாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். புதுச்சேரியை தென்னிந்தியாவின் முன்னணி தொழில் முனையமாக மாற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரேஷன் கடைகளே இல்லாத புதுச்சேரியில் ரேஷன் பொருள்கள் சீராக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மீன்பிடிக்கச் செல்லும் காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. பின்னர் அவர்களை விடுவித்தாலும் படகுகளை வைத்துக்கொள்கிறார்கள். அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை மாற்ற வேண்டும். இந்த விஜய் புதுச்சேரி மக்களுக்காக எப்போதும் துணை நிற்பான். வரும் புதுச்சேரி தேர்தல் களத்தில் தவெக கொடி பட்டொளி வீசிப் பறக்கும்” என்றார்.
The DMK government should learn from the Puducherry government. Otherwise, the people will teach them in the next election, said TVK leader Vijay.