

திமுகவை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் விமர்சித்ததுபோல் நானும் தீயசக்தி என்று சொல்கிறேன். திமுக தீயசக்தி, தவெக தூய சக்தி என்று விஜய் பேசினார்.
ஈரோடு விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. தவெகவில் அண்மையில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
“விஜய் மீது என்னவெல்லாம் அவதூறு சொல்லி மக்களை நம்ப வைக்கலாம் என்று சூழ்ச்சிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் கூட்டத்திற்கு இது இன்று நேற்று வந்த உறவல்ல, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இருக்கும் உறவு என்பது தெரியாது. அனைத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்திருக்கும் விஜயை மக்கள் கைவிட மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போயிற்று.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவுபடுத்தினால் மூன்று மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஏன் அதைச் செய்யமாட்டேன் என்கிறீர்கள்? வள்ளுவர் கோட்டத்திற்குக் காட்டும் அக்கறையை ஏன் இதற்குக் காட்டக்கூடாது? அரசு நடத்துகிறீர்களா? கண்காட்சி நடத்துகிறீர்களா?
பெரியாரிடம் இருந்து எங்களுக்குத் தேவையான கொள்கைகளை எடுத்துக் கொண்டோம். அவரைப் பின் தொடர்ந்த அண்ணா மற்றும் எம்ஜிஆரிடம் இருந்து தேர்தல் அணுகுமுறையை எடுத்துக் கொண்டிருக்கிறோம். தவெக ஒரு பொருட்டே இல்லை என்று நினைப்பவர்கள் ஏன் கதறுகிறீர்கள்? ஏன் புலம்புகிறீர்கள்?
உங்களுக்கு நீங்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் காசுதான் துணை. எனக்கு இங்கு இருக்கும் எல்லையில்லாத மக்களின் மாஸ்தான் துணை. பெரியாரின் கொள்கைகளைப் பின் தொடர்வதாக, அவரது பெயரைச் சொல்லிக்லொண்டு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் என்னெவெல்லாம் செய்கிறார்கள். பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு கொள்ளை அடிக்க வேண்டாம். அப்படிச் செய்பவர்கள்தான் நமது அரசியல் எதிரிகள்.
எதிரிகள் யார் என்று தெளிவாகச் சொல்லிவிட்டு களத்தில் வந்திருக்கிறோம். அதிலும் தேர்தல் களத்தில் இப்போது யார் இருக்கிறார்களோ அவர்களைத்தான் எதிர்க்கிறோம். நாங்கள் எதிரிகள் என்று சொல்லாதவர்களை எல்லாம் எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது. நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காகவெல்லாம் எதிர்க்க முடியாது.
திமுகவும் பிரச்னைகளும் பெஃவிகால் போட்டு ஒட்டியது போல. ஈரோட்டில் திமுக அரசு மஞ்சள் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. கரும்பு, நெல்லுக்கு ஒழுங்காக விலை நிர்ணயம் செய்யவில்லை. விவசாயிகள் தங்கள் நெல் கொள்முதலுக்கு லஞ்சம் கொடுத்தாலும் ஒழுங்காக நடப்பதில்லை. திமுகவுக்கு இதிலெல்லாம் எண்ணம் இல்லை. 24 மணி நேரமும் விஜயை எப்படி மடக்கலாம், தவெகவை எப்படி எல்லாம் முடக்கலாம் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பவானி - நொய்யலாறு - அமராவதி இணைப்பு திட்டம், வாக்குறுதி எண் 103 சொன்னார்களே செய்தார்களா? ஆறுகளைச் சுத்தப்படுத்த பல ஆயிரம் கோடி ஒதுக்கினார்களே, செய்தார்களா? ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் வேலையை மட்டும் சரியாகச் செய்வார்கள்.
கொஞ்சம் அசந்தால் மற்ற மாவட்டங்களில் மணலும் மலைகளும் காணாமல் போனது போல் ஈரோட்டின் செம்மண்ணும் காணாமல் போக வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஏதாவது தொழில் செய்யலாம் என்றாலும் விடுகிறார்களா? 30% நெசவாளர்களுக்கு கூலி பாக்கி வைத்துள்ளது அரசு. சிறு குறு தொழிலாளர்களுக்கு பீக் ஹவர் சார்ஜ் வைத்து கொள்ளையடிக்கிறார்கள். மாவட்டம் தோறும் பிரச்னைகள் இருக்கும் நிலையில், மாடல் அரசு என்று பெருமை பேசுவதற்குக் கூச்சமாக இல்லையா?
விஜய் என்ன அரசியலே பேசுவதில்லை. சினிமா வசனங்களைப் போல் பேசுகிறார். 5 நிமிடம்தான் பேசுகிறார் என்று கூறுகிறார்கள். நான் எத்தனை நிமிடம் பேசினால் உங்களுக்கு என்ன? உங்களைப் போல் தரங்கெட்ட முறையில் பேசுவதுதான் அரசியல் என்றால் அது எங்களுக்குத் தேவையில்லை. செய்ய வராமல் இல்லை. வேண்டாம் என்று விட்டுவைத்துள்ளோம்.
காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்வோம் என்பதைச் சொல்லியிருந்தோம். அதையும் தப்புத் தப்பாகப் புரிந்துகொண்டு பேசி வருகிறார்கள்.
நான் சலுகைகளுக்கு எதிரானவன் அல்ல. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என்று சொல்லி இழிவுப்படுத்துவதில் எனக்கு சம்மதம் இல்லை. மக்கள் பணத்தில் மக்களுக்குச் செய்வது எப்படி இலவசம் ஆகும்? அதையும் ஓசியில் போகிறாய் என்று கேலி செய்கிறீர்கள்? மக்களை இப்படியெல்லாம் கேவலப்படுத்தலாமா? மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிற்பான்.
நாங்கள் வாயிலேயே வடை சுடுவதற்கு திமுகவா? தவெக!
எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும் என்று சொன்னோம். உடனே எங்கள் ஆட்சியிலேயே அது இருக்கிறது என்கிறார்கள். இங்கே வாடகை வீட்டில் இருப்பவர்களே இல்லையா? வீட்டில் அனைவரும் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்று சொன்னோம். அதையும் எங்கள் ஆட்சியிலே செய்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். அரசுப் பள்ளிகளை மூடியது யார் ஆட்சியில்?
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒரே வார்த்தையில் திமுகவைக் காலி செய்தார்கள். திமுக ஒரு தீயசக்தி. (மூன்று முறை சொன்னார்) தவெக ஒரு தூய சக்தி. இரண்டுக்கும் தான் போட்டியே. என்னை முடக்க நினைக்கிறீர்கள்.
மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால்தான் முடியும். செங்கோட்டையன் நம்மோடு சேர்ந்தது நமக்கு மிகப்பெரிய பலம். அவரைப்போல் இங்கே இணையவுள்ள மூத்தவர்கள் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுப்போம்.
சமீபத்தில் முதலமைச்சர் பேசும்போது “என் கேரக்டரையே புரிஞ்சுக்கொள்ள மாட்டீர்களே” என்று பேசினார். இது சினிமா வசனம் இல்லாமல் சிலப்பதிகார வரியா? எதில்தான் உங்கள் கேரக்டரைப் புரிந்துகொள்ள வேண்டும்? தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் நீங்களும், மத்தியில் ஆள்பவர்களும் என்னுடைய கேரக்டரைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னுடைய கேரக்டர் என்று சொன்னது மக்களுடைய கேரக்டர். அது 2026 தேர்தலில் வெளிப்படும்” என்றார்.
Just as MGR and Jayalalithaa criticized the DMK, I too call it an evil force. Vijay said, "The DMK is an evil force, and the TVK is a pure force."