

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கு முன்னதாக இங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன.
இதுதொடர்பாக கலந்தாலோசிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தான் தவெக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கத்தையும் விமர்சித்துள்ளது.
"பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதைக் கடுமையாக எதிர்த்து, அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம். அப்போது எச்சரித்தது போலவே பிஹாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.
குறிப்பாக இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் மூலம் மதச் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைத்து நீக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மேலும், வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
முதல் கட்டச் சிறப்புத் தீவிர திருத்தம் குறித்த தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்ட திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையில் சரியான நகர்வாய் இருக்க முடியும்?
தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரது பெயரையும் வெறும் 30 நாள்களில் எப்படிச் சரிபார்க்க முடியும்?
இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தின் வாயிலாக, பிஹாரில் நடைபெற்றதைப் போல் தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தேசியக் குடிமக்கள் பதிவேட்டு முறை நடைமுறைப்படுத்தப்படும் அசாமில் மட்டும் தனியாகச் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என்கிற அறிவிப்பும் இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காகவேஉள்ளது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் என்கிற குழ்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கெனவே இருக்கும் நடைமுறையே தொடர வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
மேலும், தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தப்படும் நிலையில், இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் சில ஆலோசனைகள் முன்வைக்கிறது.
1. வாக்காளர் பட்டியலில் ஏதேனும் தவறுகள் இருப்பின், முறையான படிவத்தின்படி பட்டியல் திருத்த நடைமுறை வாயிலாக, அதனைச் சரிசெய்து முறையான, சரியான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும்.
2. இந்த நடைமுறை வாயிலாகப் புதிய வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். இறந்தவர்களின் பெயர்களையும் போலியான பெயர்களையும் நிரந்தரமாக நீக்க வேண்டும்.
3. புதிய வாக்காளர்களுக்கான அடையாளம் மற்றும் வயது ஆதாரத்துக்கு ஆதார் அட்டையை ஓர் ஆவணமாக ஏற்க வேண்டும்.
4. திருத்தம் செய்து இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சிகள் பாக முகவர்கள் சரிபார்க்கும் வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டும்.
5. வேட்புமனு தாக்கலுக்கான இறுதித் தேதிக்குப் பிறகு புதிய வாக்காளர்களைச் சேர்க்கக் கூடாது.
6. வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் அரசியல் கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் அப்பட்டியல் வழங்கப்பட வேண்டும்.
7. இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை இணையத்தில், எளிதில் தேடும் வசதியுடன் வெளியிட வேண்டும்.
நம் மண்ணின், மக்களின் உரிமையைக் காக்க, அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக இருக்கிறது. அதேசமயம், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை வெறும் வாக்கு அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் திமுகவின் சூழ்ச்சியையும் அறிந்தே இருக்கிறோம்.
அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றியுள்ளது. கேரள அரசின் இந்த நடவடிக்கை, அம்மக்களின் உரிமை மீதான அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சிறப்புத் தீவிர திருத்தத்தைக் கடுமையாக எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்ளும் திமுக இதுகுறித்துச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
தொகுதி மறுவரையறையை எதிர்க்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, அரசு சார்பில் தமிழக வெற்றிக் கழகத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனவே அதில் கலந்துகொண்டு மக்கள் உரிமைகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டினைத் தெரிவித்தோம். ஆனால், சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிரான திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கான நோக்கத்தையும் பின்னணியையும் மக்கள் அறியாமல் இல்லை. தேர்தல் நெருக்கத்தில் திமுகவின் இத்தகைய முன்னெடுப்பின் நோக்கம், திமுக அரசு மீது வரிசைகட்டி வரும் ஊழல் புகார்களிலிருந்து மக்களைத் திசை திருப்பம் கபட நாகம் அரசியலே ஆகும்" என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கை முழு விவரம்
TVK chief Vijay has put forward seven key recommendations for the ongoing Special Intensive Revision of the voter list.
Special Intensive Revision | TVK Vijay | All Party Meet | MK Stalin | DMK |