தவெக பரப்புரையில் இடம் மாற்றம்: தொண்டர்களுக்குக் கட்சித் தலைமை அறிவுரை | TVK | Vijay|
தவெக தலைவர் விஜய் நாளை (செப்.20) பரப்புரை மேற்கொள்ள இருந்த இடங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விஜய் தரப்பில் அனுமதி கேட்ட இடங்களுக்குப் பதிலாக வேறு சில இடங்களி பிரசாரம் செய்யக் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக கடந்த செப்டம்பர் 13 அன்று திருச்சி மற்றும் அரியலூரில் பரப்புரை செய்தார். 2-ம் கட்டமாக நாளை (செப். 20) நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாகையில் கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பேருந்து நிலையம், வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட 7 இடங்களில் அனுமதி கேட்டு காவல்துறையில் தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்நிலையில் புத்தூர் ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலை அருகே விஜய் பரப்புரை செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆனால் பகல் 12:30 - 1 மணி வரை மட்டுமே பரப்புரை மேற்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விஜய் செல்லும் வாகனத்தின் பின்னால் ஐந்து வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. வாகனத்திற்கு முன் நடந்தோ, இருசக்கர வாகனத்திலோ செல்லக் கூடாது. விஜய் பயணம் செய்யும் சாலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் அலுவலகங்கள் இருப்பதால், அங்கு பிரச்னை வராத வண்ணம் தன்னார்வலர்களை வைக்க வேண்டும். பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் கம்பு குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் எதையும் வைத்திருத்தல் கூடாது. அரசு மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது என்பது உட்பட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தொண்டர்களுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில்,
“விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக உயரமான இடங்களில் மேலே ஏறக்கூடாது. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம். காவல்துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டும். பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்பது உள்ளிட்ட 12 அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.