
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களைச் சந்திக்கும் பிரசாரங்களை செப்டம்பர் 14 முதல் மேற்கொண்டு வருகிறார். முதலில் திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நேரமின்மை காரணமாக பெரம்பலூரில் பிரசாரம் செய்ய முடியாமல் போனது. சனிக்கிழமைகள் தோறும் மக்களைச் சந்திக்கும் விஜய், இன்று நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அதில் முதற்கட்டமாக நாகப்பட்டினத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது திமுக அரசைக் குற்றம் சாட்டியதுடன் நாகை மாவட்டப் பிரச்னைகளைத் தொட்டுப் பேசினார். குறிப்பாக சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்வது ஏன் என்ற விளக்கத்தைப் பகிர்ந்தார். அதேபோல் தொடர்ந்து தவெக பரப்புரைக்குப் பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதாகவும் புகார் கூறினார். தவெகவின் போர் சத்தம் உங்களைத் தூங்க விடாது என்று முதல்வருக்கு அறைகூவல் விடுத்தார்.
இந்நிலையில், அடுத்தகட்டமாக திருவாரூரில் பிரசாரம் செய்ய வருகை தந்தார். அங்கு தெற்கு வீதியில் அவர் பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதி வழங்கியது. அப்பகுதிக்குப் பிரசார வாகனத்தில் விஜய் வந்த நிலையில், வழி நெடுகிலும் தொண்டர்கள் திரளாகக் குவிந்ததால் வாகனம் மெதுவாக நகர்கிறது. நடுவில், விஜய்க்குத் தொண்டர்கள் சார்பில் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அளிக்கப்பட்டது. அதனை வாகனத்திற்கு மேலே வந்த விஜய் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டிய இடத்திற்கு அவர் வந்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் குவிந்துள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே இதுபோல் முதல் பிரசாரம் மேற்கொண்ட திருச்சியில் 5 மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஆனது. அதனால் அன்று திட்டமிடப்பட்டிருந்த பெரம்பலூருக்கு விஜய் செல்ல முடியாத நிலை உருவானது. இந்நிலையில் இன்றும் தாமதம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.