தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன் என்று விஜய் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்திடம், மாநாடு தொடர்பான 21 கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலளிக்குமாறு விழுப்புரம் மாவட்டக் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இந்த நோட்டீஸில், மாநாட்டுக்காக மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள், மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரபலங்களின் விவரங்கள் போன்றவை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை.
இதை அடுத்து நோட்டீஸில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.