தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது தமிழக வெற்றிக் கழகம்: விஜய்

நமது கழகத்தின் முதல் மாநில மாநாட்டிற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்.
விஜய்
விஜய்
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளதாக விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் கடந்த ஆகஸ்ட் 22 அன்று கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து, கொடிப் பாடலையும் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தவெக கொடியின் விளக்கத்தையும் வரலாற்றையும் மாநாட்டில் அறிவிக்கிறேன் என்று விஜய் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு செப்டம்பர் 23-ல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக விழுப்புரம் விக்கிரவாண்டியில் மாநாட்டை நடத்த அனுமதி கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து புஸ்ஸி ஆனந்திடம், மாநாடு தொடர்பான 21 கேள்விகளை எழுப்பி அவற்றுக்குப் பதிலளிக்குமாறு விழுப்புரம் மாவட்டக் காவல்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.

இந்த நோட்டீஸில், மாநாட்டுக்காக மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள், மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கியப் பிரபலங்களின் விவரங்கள் போன்றவை குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை.

இதை அடுத்து நோட்டீஸில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து தவெக சார்பில் விழுப்புரம் மாவட்டக் காவல்துறையிடம் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் விக்கிரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டை நடத்த காவல்துறை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தவெக பதிவு செய்யப்பட்ட கட்சியானது என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜயின் அறிக்கை:

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது.

இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம்”.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in