தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக கட்சித் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜய். 2026 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் கொண்டு களமிறங்கிய விஜய் நாடாளுமன்றத் தேர்தல், இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்கிற நிலைப்பாட்டை எடுத்தார்.
இவற்றைத் தொடர்ந்து தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராகி வரும் அவர், கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இரு நாள்களுக்கு முன்பு கட்சிக் கொடியை ஏற்றி விஜய் ஒத்திகை பார்த்ததாகவும் சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகின.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளார். இத்துடன் கட்சியின் கொடிப் பாடலை வெளியிட்டு, கட்சியின் கொடியை ஏற்றி வைப்பதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சென்னை பனையூரிலுள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.