அதிமுக கூட்டணியில் தவெக இணைவது குறித்து எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் சூசகமாகப் பேசியுள்ளது அரசியல் சூழலில் பேசுபொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்தத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் திமுகவை எதிர்க்கும் மேற்கொண்டு கட்சிகள் இணையுமா என்பது தான் கேள்விகளாக இருந்து வருகின்றன.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தேமுதிக, தங்களுடைய கூட்டணி நிலைப்பாட்டை ஜனவரியில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்துவிட்டார். ஓ. பன்னீர்செல்வத்தை இணைக்க எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருக்கிறார். பாமக இரு தரப்பாக இருந்து செயல்பட்டு வருகிறது. பாமக என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கவுள்ளது என்பதற்கும் தற்போதைய நிலையில் பதில் இல்லை.
நாம் தமிழர் தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவித்துவிட்டார். பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பு, விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் கசிந்தன. பேச்சுவார்த்தையில் பெரியளவில் முன்னேற்றம் காணப்படாததன் காரணத்தால், பாஜகவுடன் அதிமுக கூட்டணியை இறுதி செய்ததாகப் பேச்சுகள் எழுந்தன.
நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டால், நான்கு முனைப் போட்டியாக களம் மாறிவிடும் என்பதால் இதைக் குறைப்பதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தான் கரூரில் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள்.
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளைப் பலரும் கண்டித்தாலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் விஜயை நேரடியாகச் சாடவில்லை. விஜய் வெளியிட்ட காணொளிக்குப் பிறகு தான் சில தலைவர்கள் விஜய் மீதான விமர்சனத்தில் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்கள்.
ஆனால், பாஜக மற்றும் அதிமுகவினர் விஜய் மீது காட்டமான விமர்சனங்களை வைப்பதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார்கள். கரூர் சம்பவத்தையொட்டி, பல்வேறு கூட்டணிக் கணக்கு முடிச்சுகள் போடப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வந்தன. விஜயை அழைத்து எடப்பாடி பழனிசாமி பேசியதாகக் கூறப்பட்டன.
இந்நிலையில் தான் அதிமுக - தவெக கூட்டணிக்கான பிள்ளையார்சுழி போடப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அவர் பேசியதாவது:
"திமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணி என ஸ்டாலின் எண்ணுகிறார். அது வெற்றுக் கூட்டணி. அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி தான் வெற்றியைப் பெறும் கூட்டணி.
நீங்கள் (ஸ்டாலின்) கூட்டணியை நம்பி இருக்கிறீர்கள். கூட்டணி தேவை தான். ஆனால், அதிமுக தலைமையில் அமைக்கப்படும் கூட்டணி வலுவான கூட்டணியாக இருக்கும்.
அங்கே பாருங்கள் கொடி பறக்கிறது. பிள்ளையார்சுழி போட்டுவிட்டார்கள். எழுச்சி, ஆரவாரம். குமாரபாளையத்தில் நடைபெறும் கூட்டத்தின் ஆரவாரம் உங்களுடைய செவியைத் துளைத்துக் கொண்டு போகப்போகிறது" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
குமாரபாளையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தவெக கொடியுடன் சிலர் கலந்துகொண்டிருந்தார்கள். தவெக கொடியைக் குறிப்பிடும் வகையில் எடப்பாடி பழனிசாமி 'கொடி பறக்கிறது' எனப் பேசியதாகத் தெரிகிறது. இதன்மூலம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையவுள்ளதற்கான தொடக்கப்புள்ளியை எடப்பாடி பழனிசாமி வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ளப்படுகிறது. அதேசமயம், அதிமுக - தவெக கூட்டணி என்பது பாஜகவும் இடம்பெற்றுள்ள கூட்டணியா அல்லது பாஜக இடம்பெறாத கூட்டணியா என்ற புதிருக்கு வரும் நாள்களில் பதில்கள் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.
Edappadi Palaniswami | AIADMK | ADMK | TVK | TVK Vijay | Tamilaga Vettri Kazhagam |