
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என தேர்தல் வியூக நிபுணரும் ஜன் சுராஜ் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சியை எதிர்த்து அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு முக்கியக் கட்சிகள் களம் காண்கின்றன. தேர்தலுக்கு முன்பு இந்த நான்கு கட்சிகளின் இடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்துக் கூட்டணிகளுக்கும் சாத்தியம் உள்ளது எனப் பேசப்பட்டு வரும் சூழலில், அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளன. இதற்கேற்ப, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அதிமுக குறித்து விமர்சனங்களை வைக்காமல் தவிர்த்து வருகிறார். மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுகவை மட்டுமே விஜய் பெயரைக் குறிப்பிடாமல் விமர்சனங்களை வைத்து வருகிறார்.
அதிமுக - தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிரசாந்த் கிஷோர் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விஜய் மற்றும் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார். இந்த விழாவில், தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கையாக விஜய் இருப்பதாக பிரசாந்த் கிஷோர் பேசினார்.
இந்நிலையில், தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தவெகவின் கூட்டணி வியூகம் குறித்து அவர் கூறியதாவது:
"திமுக எதிர்ப்பு வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அஇஅதிமுக நினைக்கிறது. அதிமுக மிக முக்கியமான அரசியல் கட்சி. அவர்கள் பாரம்பரிய அரசியல் முறையையே பின்பற்றுவார்கள். எனவே எண்களின் அடிப்படையில் அவர்கள் முடிவெடுப்பார்கள். திமுகவை வீழ்த்துவதற்காக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என அவர்கள் நினைப்பார்கள்.
ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிடும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும்" என்றார் பிரசாந்த் கிஷோர்.