
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பிப்ரவரி 5 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இண்டியா கூட்டணியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2023 இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளதால், இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்காமல் திமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், ஈரோடு கிழக்கு முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்த அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்தது. அதிமுகவைத் தொடர்ந்து தேமுதிகவும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தன.
நாம் தமிழர் மட்டும் போட்டியிலிருந்து விலகாமல் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் ஈரோடு தொகுதியிலும் 2024 மக்களவைத் தேர்தலில் திருப்பூர் தொகுதியிலும் போட்டியிட்ட சீதாலட்சுமி, ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக வெற்றிக் கழகம் மௌனம் காத்து வந்த நிலையில், இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும், எந்தக் கட்சிக்கும் ஆதரவும் இல்லை என்பதையும் அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: