

தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் இவ்வளவு நாள் அமைதி காத்தது ஏன் என விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டபோது, கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள். இந்தச் சம்பவம் நடந்து ஒரு மாத காலத்துக்கு கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப்போய் கடந்தது.
அக்டோபர் 27 அன்று கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன்பிறகு, கட்சியின் செயல்பாடுகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. தவெக நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்து பேசத் தொடங்கினார்கள். தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் இவ்வளவு நாள்கள் அமைதி காத்ததற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
தனது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"ராஜ்மோகன் மௌனம் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் பேச வேண்டாம், அமைதியாக இருக்கலாம் என்ற ஒரு முடிவு தான்.
அந்த இரவு மக்களைச் சந்திக்கவிருந்த இரண்டாம் கட்ட தலைவர்களை மாவட்ட நிர்வாகமோ, காவல் நிர்வாகமோ சந்திக்கவிடவில்லை.
அடுத்தடுத்த நாள்களில் நாங்க அரசியலே செய்ய விரும்பவில்லை என முதல்வர் பெருந்தன்மையாகப் பேசினாலும் விடிவதற்குள் விஜயைக் கைது செய் என மாணவர் கூட்டமைப்பு பெயரில் கருப்புச் சுவரொட்டி ஒட்டினார்கள். மாணவர் கூட்டமைப்பினரிடம் கேட்டால், அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார்கள். அப்படியெனில் அரசியல் செய்கிறார்களா, இல்லையா?
ஒரு டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் காவல் துறை அதிகாரி செய்தியாளர் சந்திப்பை நடத்தி இவர்கள் மீது தான் தவறு, வேறு எதுவுமே இல்லை என்றார். அவருக்குக் கீழ இருக்கும் காவல் துறை அதிகாரிகள் நேர்மையாக விசாரிப்பார்களா?
முதல் தகவல் அறிக்கையில் கட்சியின் பெயரைக்கூட சரியாகப் போடாமல் அவ்வளவு அவசரம். இவர்கள் நீதி விசாரணையை சரியா பண்ணிடுவாங்களா?
இதே சம்பவம் வேற ஒரு மாநிலத்தில் கர்நாடகத்தில் நடக்கிறது. கர்நாடகத்தில் இப்படி ஒன்று நடந்தது. அந்த முதல்வர் பதவி விலக வேண்டும் என இந்தியா முழுக்கப் போராட்டம் செய்வார்களா இல்லையா? ஆனால் இங்கு ஒரு கான்ஸ்டபிள் மீது கூட ஒரு மெமோ கூட கொடுக்கவில்லை. இவர்கள் நேர்மையான நீதி விசாரணையை மேற்கொள்வார்களா?
ஒரு பக்க சார்பு இல்லாத நீதி விசாரணை நோக்கி நாம் நகரும்போது, அமைதியாகத்தான் இருந்தாக வேண்டும். அடித்தாலும் அவதூறுகள் அவமானங்கள் வந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டு அமைதியாக இருந்தே ஆக வேண்டும். ஏன் தெரியுமா? நமக்கு மட்டும் கிடையாது. விலைமதிப்பில்லாத அந்த உயிர்களை இழந்துருக்கிறார்கள். எங்களுடைய சொந்தங்கள், எங்களுடைய தொண்டர்கள், எங்களுடைய குடும்பங்கள்... அந்தக் குடும்பத்திற்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. அந்த மக்களுக்கு, ஊர் மக்களுக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. அதற்கு நீதி விசாரணை அவசியம். அதற்காகதான் நாம் அமைதியாக இருந்தோம்" என்றார் ராஜ்மோகன்.
TVK Vijay | Vijay | Rajmohan |