
கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ள தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன், அரசியல் அவதூறுகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் அன்றிரவே திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் யாரும் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனையில் சந்திக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இரு நாள்களுக்குப் பிறகு காணொளி வெளியிட்டு பேசினார். கட்சிப் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகின்றன.
தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் இச்சம்பவம் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் சமூக ஊடகப் பக்கங்களில் எதுவும் பதிவிடாமல் இருந்தார். இவரும் தலைமறைவானதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ராஜ்மோகன் குறித்து பல்வேறு மீம்கள் பகிரப்பட்டு வந்தன.
செப்டம்பர் 27 துயரச் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் பேசிய காணொளியை மட்டுமே தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் ராஜ்மோகன். இதனிடையே, தவெக தலைவர் விஜய் கடந்த இரு நாள்களாக பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் காணொளி வாயிலாகக் கலந்துரையாடி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் இதை உறுதிபடுத்தினார். மேலும், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோரி கட்சி சார்பில் தமிழ்நாடு காவல் துறை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு மௌனம் கலைத்துள்ள ராஜ்மோகன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.
ராஜ்மோகன் பதிவு:
"வேதனையில் இருந்து மீள முடியவில்லை. முடியாது என்றே தோன்றுகிறது. அதேசமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியைப் பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.
நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்று தருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்" என்று ராஜ்மோகன் பதிவிட்டுள்ளார்.
Tamilaga Vettri Kazhagam | Rajmohan | TVK Vijay | Karur Stampede |