அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் செப்டம்பர் 30 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் இருந்தது. இது அறுவைச் சிகிச்சை முறையில் அல்லாமல் சரி செய்யப்பட்டது. ரஜினிகாந்தின் இதயத்தில் வீக்கத்தைக் குறைப்பதற்காக ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் இரு நாள்களில் வீடு திரும்புவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று மாலை மருத்துவ அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார் விஜய்.