தில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்: தவெக தலைவர் விஜய் விமர்சனம்

"அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும் தன் குடும்பத்துக்காகவும் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலினால் வெளிப்படையாகக் கூற முடியுமா?"
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

முதல்வர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றதை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை சோதனையை ஒட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் தில்லி சென்றது பெரும் பேசுபொருளானது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுதொடர்பாக விமர்சித்தபோதும், முதல்வர் மு.க. ஸ்டாலின் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன், ஊர்ந்து போகமாட்டேன் என்று பதிலளித்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயும் இதே விமர்சனத்தை முன்வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் திமுக தலைமையிலான குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்றி விளம்பர மாடல் திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றார்போல் அமைந்தது தான் நிதி ஆயோக் கூட்டம்.

சென்ற ஆண்டு இதே நிதி ஆயோக் கூட்டம் தில்லியில் நடைபெற்றபோது, அக்கூட்டத்துக்குச் செல்லாமல், தான் செல்லாததற்கான காரணங்களை அடுக்கி, முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு காணொளி வெளியிட்டார். அப்போது சொன்ன காரணங்கள், இப்போதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படியிருக்க இம்முறை மட்டும் ஏன் செல்ல வேண்டும்? எல்லாவற்றுக்கும் காரணம், அமலாக்கத் துறை படுத்தும் பாடுதான்!

ரூ. 1,000 கோடி ஊழல் தோண்டி எடுக்கப்பட்டால் தம் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சத்தில் இந்த முறை, நிதி ஆயோக் கூட்டத்தைக் காரணமாக வைத்து தில்லி சென்றார். பிரதமரையும் வேறு தனியாகச் சந்தித்தார்.

உண்மையிலேயே இந்தச் சந்திப்பில், அமலாக்கத் துறை சோதனைகள், வழக்குகள் தொடர்பாகவும் தன் குடும்பத்துக்காகவும் ஒன்றிய அரசின் பிரதமரிடம் எதுவும் பேசவில்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினால் மனசாட்சியுடன் வெளிப்படையாகக் கூற முடியுமா?

ஒன்றிய பாஜக அரசின் வஞ்சிக்கும் போக்கைக் கண்டித்து, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள் இந்த நிதி ஆயோக் கூட்டத்தை நிராகரித்துள்ளார்கள்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் முழு அறிக்கை

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in