
கரூர் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜயின் அடுத்த 2 வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் சென்றவாரம் சனிக்கிழமை அன்று நடந்த தவெக பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளார்கள். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. கரூரைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமாரைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த விஜயின் பரப்பரை திட்டத்தில் அடுத்ததாக அக்டோபர் 5-ல் வேலூர் மற்றும் ராணிப்பேட்டையிலும், அக்டோபர் 11-ல் கடலூர் மற்றும் பாண்டிச்சேரியிலும் பரப்புரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்விரண்டு நிகழ்ச்சிகளும், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தவெக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தவெகவின் சமூக ஊடகப் பதிவில்,
”தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.