

கரூர் சம்பவத்தன்று தவெகவினருக்கு ஊருக்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்று தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழுவை நியமித்து தவெக தலைவர் விஜய் நேற்று (அக்.28) அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தவெகவின் புதிய நிர்வாகக் குழுக் கூட்டம், இன்று காலை 10 மணிக்கு பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்தார்.
அதனடிப்படையில், சென்னை பனையூரில் புதிய நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆத அர்ஜுனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதன் பின்னர் தவெகவின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
”பனையூரில் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அடுத்து வரும் கட்சி, தேர்தல் பணிகள் குறித்தும் மற்ற இதர நிகழ்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. விஜயின் அடுத்த கட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உயர் நீதிமன்றத்தில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னர் நடக்கும். வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதற்காக 10 நாள்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எங்கள் பயணத் திட்டங்கள் தெரியவரும்.
கரூர் துயரச் சம்பவத்தன்று நாங்கள் அனைவரும் கரூருக்கு வெளியில் காத்திருந்தோம். கரூர் ஊருக்குள்ள செல்ல நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனை உச்ச நீதிமன்றத்திலும் தெளிவாகக் கூறியுள்ளோம். கிட்டத்தட்ட இரவு 2:30 மணி வரை நாங்கள் காத்திருந்தோம். அப்போது எங்களுக்கு அனைத்து சாலைகளும் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வந்தன. தவெக கொடி கட்டிய எந்த வாகனத்தையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அதற்குப் பின் நடந்த நாடகங்களை எல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அமைச்சர்கள் வந்து நாடகம் நடத்தினார்கள். எங்களுக்கு கரூருக்குள் போக அனுமதி வழங்கப்படவில்லை. அதன்பின் உடற்கூராய்வு நிகழ்த்தப்பட்டதாக தகவல் வந்தவுடன், இனி எங்களுக்கு வேறு எங்கேயும் நீதி கிடைக்காது என்று தெரிந்தது. ஏனென்றால் எங்கள் முதல் குற்றச்சாட்டு காவல்துறை மீதுதான். அதனால் சென்னைக்கு விரைந்து வந்து நீதிமன்றத்தில் முறையிட்டோம். அதன்பின் நடந்ததை எல்லாம் பார்த்திருப்பீர்கள்.
இவர்கள் என்ன நினைத்தார்களோ அது நடக்காது. கட்சியை முடக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அது கண்டிப்பாக நடக்காது. மக்கள் விஜய் மீது 100% நம்பிக்கை வைத்துள்ளார்கள். மொத்த சம்பவமும் எப்படி நடந்தது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும்.
எங்களுக்கான ஒரே துக்கம், 41 பேர் எங்களுடைய சொந்தங்கள் பலியானது மட்டும்தான். அது கண்டிப்பாக எந்தக் காலகட்டத்திலும் மீள முடியாத துக்கம். மற்றபடி யாரும் எங்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியாது. அதற்கெல்லாம் யாரும் பயப்படவில்லை. எந்த இடத்திலும் எந்த நொடியிலும் எங்களில் யாருக்கும் தொய்வுமில்லை. நாங்கள் கண்டிப்பாக இதைவிடப் பெரிய நெருக்கடிகளை எல்லாம் எதிர்கொள்ளும் மனதிடத்துடன்தான் இருக்கிறோம். 41 பேருடைய உயிரிழப்பு மட்டும்தான் எங்களது பெரிய துக்கம்” என்றார்.
TVK Joint General Secretary Nirmalkumar stated that TVK members were not allowed to enter the town on the day of the Karur incident.