
தவெகவின் புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவும், சி.டி.ஆர். நிர்மல்குமாரும் தவெக தலைமை அலுவலகத்தில் இன்று (ஜன.31) விஜயை சந்தித்து அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். இந்நிலையில், அவர்களுக்கான பொறுப்புகளையும், புதிய பொறுப்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளார் விஜய்.
தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு) பொறுப்பும், ஜெகதீஷுக்கு தலைமைக் கழக இணைப் பொருளாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
தவெகவின் கொள்கைக் பரப்புச் செயலாளராக ராஜ்மோகனும், கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக லயோலா மணி (எ) மணிகண்டன், பேராசிரியர் சம்பத்குமார் மற்றும் கேத்ரின் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தவெக செய்தித் தொடர்பாளராக வீரவிக்னேஷ்வரனும், இணைச் செய்தித் தொடர்பாளராக ரமேஷும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். தவெக தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷும், தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்களாக குருசரண் மற்றும் ரஞ்சன் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தவெக சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளராக குருமூர்த்தியும், சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்களாக ராம்குமார், வெங்கடேஷ், நிரேஷ் குமார், அறிவானந்தம் மற்றும் ஃப்ளோரியா இமாக்குலேட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
மேலும், இன்று நியமிக்கப்பட்டுள்ள 19 புதிய பொறுப்பாளர்கள் கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்தின் வழிகாட்டுதலின் கீழ் கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள் என அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.
அத்துடன், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, தன் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் இணைந்து அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் எனவும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார் விஜய்.