
விஜயின் கரூர் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக வெற்றிக் கழகம் முறையிட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை மீதான விசாரணை திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் நடைபெறவுள்ளதாக தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சனிக்கிழமைதோறும் மக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன்படி செப்டம்பர் 27 அன்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் மேற்கொண்டார்.
நாமக்கலில் காலை 8.45 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கவிருப்பதாக கட்சி சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8.45 மணிக்கு தான் விஜய் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி புறப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் சென்றார்.
நாமக்கல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு சாலை மார்க்கமாகவே கரூர் சென்றடைந்தார். கரூர் நகரத்தை அடைந்தவுடன் எண்ணிலடங்கா கூட்டம் விஜய் பரப்புரை வாகனத்தைச் சூழ்ந்தது. இதனால், பிரசாரம் மேற்கொள்ளும் இடத்துக்கு விஜய் சென்றடைவதே பெரும் சவாலாக அமைந்தது.
இரவு 7 மணிக்கு மேல் விஜய் பிரசாரத்தை மேற்கொண்டார். நெருக்கமான இடத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்டநெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்துள்ளார்கள். விஜய் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ. 10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுத்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகளுடன் விஜய் இன்று காலை ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முறையிடப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத்தினர் முறையிட்டுள்ளார்கள்.
இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதியிடம் நாங்கள் முறையிட்டோம். நாளை மதியம் 2.15 மணிக்கு மதுரை அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொன்னார்கள். நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், இதுபற்றி விரிவாக எதுவும் பேச வேண்டாம். நாளை மதியத்துக்குப் பிறகு பேசுகிறோம்" என்றார் அவர்.
சிபிஐ விசாரணை அல்லது சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முறையிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதில் சதி நடந்திருக்கலாம் என தவெகவினர் சந்தேகிப்பதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
Karur | Karur Stampede | TVK Vijay | Madras High Court |