
தவெகவின் 2-வது மாநில மாநாடு திட்டமிட்டதற்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு முன்கூட்டியே தொடங்கியுள்ளது.
தவெகவின் 2-வது மாநில மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரபத்தி என்ற பகுதியில் இன்று (ஆக. 21) மாலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் நடந்தன.
மாநாடு இன்று (ஆக. 21) நடைபெறுவதை ஒட்டி, காலை முதலே மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டுள்ள திடலுக்குத் தொண்டர்கள், பொதுமக்கள் எனப் பலரும் வரத் தொடங்கினார்கள்.
மாநாடு நடைபெறும் திடலில் வெயில் கொளுத்துவதால் ராட்சத டிரோன்கள் மூலமாக திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மேலும், டிரோன்கள் மூலம் தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், திண்பண்டங்கள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன.
மேலும், மாநாட்டுத் திடலில் குவிந்த தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக அங்கிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை மாநாட்டை நடத்த முன்பு திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளதாலும், வெய்யிலின் தாக்கத்தாலும் மாநாட்டை முன்கூட்டியே நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இதையொட்டி, பிற்பகல் 3 மணிக்கு மாநாடு தொடங்கியது. முதலாவதாக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து மாநாட்டுத் திடலுக்கு வரும் விஜய், அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக்கில் ஈடுபடவுள்ளார்.
மேலும், மாநாட்டில் 10-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.