தவெகவுக்கு வருவது சும்மா கூட்டமா?: விஜய் கேள்விக்கு மக்களின் பதில் | TVK Vijay |

கொள்முதல் நிலைய ஊழலைக் குறிப்பிட்டு விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்றும் விஜய் பேச்சு...
தவெகவுக்கு வருவது சும்மா கூட்டமா?: விஜய் கேள்விக்கு மக்களின் பதில் | TVK Vijay |
2 min read

திருவாரூர் தெற்கு வீதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டார். பிரசார வாகனத்தில் இருந்து பச்சைத் துண்டுடன் வந்த அவர், விவசாயத்தைக் குறிக்கும் வகையில் தோளில் பச்சைத் துண்டுடன் வந்து பரப்புரை செய்தார்.

அவர் பேசியதாவது -

”திருவாரூர் என்றாலே தியாகராஜர் கோவில் ஆழித்தேர்தான் நினைவுக்கு வரும். திருவாரூர் தேர் என்றால் சும்மாவா? இந்த மண்ணின் அடையாளம் ஆயிற்றேன். ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட்டியது நான் தான் என்று மார் தட்டிச் சொல்லிக் கொண்டது யார் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் அவரது மகனான முதல்வர் என்ன செய்கிறார்? நன்றாக ஓட வேண்டிய தமிழகம் என்கிற தேரை, நான்கு பக்கமும் கட்டைகளைப் போட்டு ஆடாம அசையாமல் நிறுத்திவிட்டார். இதைப் பெருமையாகவும் சவாலாகவும் சொல்கிறார்.

திருவாரூர் தான் சொந்த மாவட்டம் என்கிறீர்கள். ஆனால் திருவாரூர் கருவாடாகக் காய்கிறது. அதைக் கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள். உங்கள் அப்பா பிறந்த ஊர் என்று சொல்கிறீர்கள். உங்கள் அப்பாவின் பேனாவுக்குச் சிலை வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் உங்கள் அப்பாவின் பெயரை வைக்கிறீர்கள். ஆனால், உங்கள் அப்பா பிறந்த திருவாரூர் மாவட்டத்தில் அடிப்படை சாலை வசதிகள் கூட சரியாக இல்லையே. நாகையைப் போலவே திருவாரூரிலும் அதிகமான குடிசைப் பகுதிகள் உள்ளன.

நண்பா! இங்கிருக்கும் பல்கலைக்கழகத்தில் எல்லா துறைகளும் இருக்கிறதா? இங்கிருக்கும் மருத்துவக் கல்லூரியே மருத்துவம் பார்க்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது. அதில் அனைத்துக் கருவிகள் ஒழுங்காக வேலை செய்கிறதா? செய்யாதே! திருவாரூர் ஒரு மாவட்டத்தின் தலைநகர். ஆனால் திருவாரூர் பேருந்து நிலையத்திற்கு நெடுஞ்சாலையில் இருந்து முறையான சாலை இருக்கிறதா? கும்பகோணம் - நீடாமங்கலம் வழியே புதிய ரயில் பாதை அமைக்க வேண்டிய கோரிக்கை 50 ஆண்டுகளாக நிறைவேறாமல் இருக்கிறது.

இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவருடைய வேலையே முதல்வரின் வீட்டுக்குச் சேவை செய்வதுதான். மக்கள்தான் முக்கியம் என்பதை அவருக்குப் புரிய வைக்க வேண்டும்.

உங்களுடன் ஸ்டாலின் என்பதை உங்கள் குடும்பத்திற்குத்தான் சொல்ல வேண்டும். மக்களிடம் சொல்லிக்கொள்ள முடியாது ஏனென்றால் நீங்கள் மக்களுடன் இல்லை. இதை நான் சொல்லவில்லை. பிரபலமான வாரப் பத்திரிகையில் குறிப்பிட்டிருப்பதைத்தான் நான் சொல்கிறேன்.

டெல்டா பகுதி விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவித்து வருவதாக புகார் வந்தது. இங்குள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை ஏற்றி இறக்க 40 கிலோ நெல் மூட்டைக்கு ரூ. 40 கமிஷன் வசூலிப்பதாகச் சொல்கிறார்கள். அரசாங்கமே ரூ. 10 கொடுக்கிறது. அதற்கு மேல் கமிஷன். ஒரு டன்னுக்கு ரூ. 1000 கமிஷன். இந்த நான்கரை ஆண்டுகளில் பல கோடிகளை விவசாயிகளிடம் இருந்து கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

இதை வேறு யாராவது சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டேன். என்னிடம் சொன்னதே விவசாயிகள்தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள்.

முதல்வர் சார்! இது உங்கள் ஆட்சியில் நடந்திருக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால் 40-க்கு 40 என்பது தேர்தல் முடிவுகளாக இருக்கலாம். டெல்டா விவசாயிகளுக்கு 40-க்கு 40 என்பது அவர்கள் வயிற்றில் அடித்து நீங்கள் வாங்கிய கமிஷன். இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

அரியலூரில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன். அது ஆழமாகப் பதிய வேண்டும். தீர்வை நோக்கிச் செல்வதுதான் தவெகவின் லட்சியம். நம் தேர்தல் அறிக்கையில் அதற்கான விளக்கத்தை தெளிவாகக் கொடுப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம். எது நடைமுறைச் சாத்தியமோ அதை மட்டும்தான் சொல்வோம். அதையே செய்வோம். கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், அடிப்படை சாலை வசதி, மின்சாரம், பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய அடிப்படை விஷயங்களைக் கொடுப்பதில் எந்த சமரசமும் கிடையாது.

தவெகவின் லட்சியம் என்றால், ஏழ்மை வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி தான். நண்பா! ஒரே ஒரு சந்தேகம், எங்கு போனாலும் இது வெறும் சும்மா கூட்டம் ஓட்டு போட மாட்டார்கள் என்று சொல்கிறார்கள் அப்படியா?”

என்று பேசினார். அவர் கேட்ட கேள்விக்கு மக்கள் உரத்த குரலில் இல்லை என்று பதிலளித்த நிலையில் உரையை முடித்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in