

தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில்தான் போட்டி. அது இன்னும் வலுவடைந்திருக்கிறது. அதில் தவெகவுக்குத்தான் 100% வெற்றி என்று தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தவெக தலைவர் விஜய் பேசியதாவது:-
“நம் குடும்ப உறவிகளை இழந்ததனால் சொல்லமுடியாத வேதனையிலும் வலியிலும் இருந்தோம். நாம் அமைதி காத்து வந்த நேரத்தில் நம்மைப் பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் பின்னப்பட்டன. இவையெல்லாம் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு துடைத்து எறியப்படும்.
ஆனால் அதற்கு முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நமக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட உரைக்கு நாகரிக பதிலடி கொடுக்க வேண்டும். கரூர் சம்பவத்தில் அரசியல் செய்ய விருப்பமில்லை என்று அடிக்கடி சொன்ன முதல்வர், அக்டோபர் 15 அன்று சட்டமன்றத்தில் நமக்கு எதிராகப் பேசிய பேச்சில் எவ்வளவு வன்மத்தைக் கக்கியுள்ளார் என்பதையும், எப்படிப்பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் உணராமலா இருப்பார்கள்?
பிரசார வாகனத்திற்கு உள்ளேதான் இருக்க வேண்டும். பேருந்துக்கு மேலே வந்து கை அசைக்கக் கூடாது என்று இந்தியாவிலேயே எந்தவொரு அரசியல் கட்சித் தலைவருக்கும் கொடுக்கப்படாத நிபந்தனைகள் எனக்கு விதிக்கப்பட்டன. உடனே தவெக சார்பில், அனைத்துக் கட்சிகளுக்கும் சமமாக முறையான பொது வழிகாட்டு முறைகளை வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தையும் நாடியிருக்கிறோம். இதையும் தமிழ்நாட்டு மக்கள் உணராமலா இருப்பார்கள்?
இப்படி ஒரு அரசியல் காழ்ப்புடன், நேர்மைத் திறனற்று நம்மைப் பற்றி குற்றம்சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு அக்டோபர் 13 அன்று உச்ச நீதிமன்றத்தில் நடந்த விவாதங்களின் அடிப்படையில் சில கேள்விகள் கேட்கிறேன்.
பொய் மூட்டைகளை அவிழ்வித்துவிட்டு தவெகவைப் பற்றி அவதூறுகளைப் பரப்பிய திமுக சார்பாகக் கோடிக் கணக்கில் பணத்தை கொட்டி அமர்த்தப்பட்ட அறிவார்ந்த வழக்கறிஞர்கள், கபட நாடக திமுகவின் தில்லுமுல்லுகளைத் தாங்கிப் பிடிக்க இயலாமல், உச்ச நீதிமன்றத்தில் திக்கித் திணறி நின்றது முதல்வருக்கு மறந்துவிட்டதா?
கரூர் சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாகத் தனிநபர் ஆணையம் அமைத்து, அதை அவமதிப்பது போல் அரசு உயர் அதிகாரிகள் தவெகவைப் பற்றி அவதூறுகளைப் பரப்பும் வகையில் செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்த வைத்தது ஏன்? இதெல்லாம் ஏன் நடக்கிறது என்று ஒட்டுமொத்த மக்களும் கேள்வி கேட்கிறார்கள். இதையும் முதல்வர் மறந்துவிட்டாரா?
அரசு காவல் உயர் அதிகாரிகள் ஊடகங்களிடம் பேசியது என்பது, பொதுமக்களிடையே நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் நியாமான விசாரணை மூலம் அந்தச் சந்தேகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் தலையில் ஓங்கி நறுக்கென்று கொட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?
உயர் நீதிமன்றத்தின் நீதிபதி சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டதை, தவெகவுக்கு எதிராக உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துவிட்டதாக கொண்டாடினார்கள். அந்த உத்தரவு எந்த ஆவணத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. அப்போதும் கூட உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய திமுகவின் அறிவார்ந்த வழக்கறிஞர்கள் பதில் சொல்ல முடியாமல் வாய் மூடி மௌனம் காத்ததை நாடே பார்த்தது. அதை இதையும் முதல்வர் மறந்துவிட்டாரா?
பொது வழிகாட்டு முறைகள் அமைக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வந்த ரிட் மனுவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் கையாள வேண்டும். தனி நீதிபதி கையாளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்னதல்லவா. அதுமட்டுமில்லாமல் கோரிக்கையே இல்லாமல் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது எந்த வகையில் சரி என்றும் கேள்வி எழுப்பியது உச்ச நீதிமன்றம். இது எல்லாம் அறியாமலோ, அறியாதது போலவோ உச்சபட்ச அதிகார மயக்கத்திலிருந்து முதல்வர் பேசினாரோ?
மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு ஆகியவை எதுவும் இல்லாமல் வெறும் பேச்சில் மட்டுமே வைத்துக்கொண்டு முதல்வர் அரசியல் ஆதாயம் தேடும் ஆட்டத்தை ஆடத் தொடங்கியிருக்கிறார். 1972-ல் கேள்வி கேட்க ஆளில்லாமல் போனதில் இருந்து திமுக தலைமை இப்படித்தான் இருக்கிறது. இப்போது கேட்கப்பட்ட கேள்விகள் கூட நான் கேட்டதில்லை. உச்ச நீதிமன்றம் கேட்டது. இந்த அரசு நடத்தும் விசாரணை மீது சந்தேகம் ஏற்படுகிறது என்றால் அவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமல்ல மக்களுக்கும் திமுக அரசின் மீது இருந்த நம்பிக்கை மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துவிட்டது.
இது முதல்வருக்குப் புரிகிறதா? ஒருவேளை புரியவில்லை என்றால், 2026 தேர்தலில் திமுக தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் புரிய வைப்பார்கள். அப்போது வழக்கம்போல் ‘மக்கள் தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம்’ என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒளிந்து கொள்வார்களே அதை இப்போதே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.
நமக்கு வந்திருக்கும் இடையூறு தற்காலிகமானது. எல்லாவற்றையும் தகர்த்தெறிவோம். மக்களுடன் கைகோத்து நிற்போம். நம் பயணத்தில் தடம் மாறமாட்டோம். 2026-ல் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையில் மட்டும்தான் போட்டி. இந்தப் போட்டி இன்னும் வலுவடைந்திருக்கிறது. அதில் 100% வெற்றி நமக்கே” என்றார்.
The competition is only between TVK and DMK. It has become even stronger. In that, TVK will have 100% victory, said TVK leader Vijay.