விஜயின் அடுத்த மக்கள் சந்திப்பு: அறிவிப்பு வெளியிட்ட என். ஆனந்த் | TVK Vijay |

கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோரிக்கை...
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
1 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை முதல் மீண்டும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தொடங்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார். அதன்பின் பொதுக்கூட்டங்கள் வழியே மக்களைச் சந்தித்து வந்த அவர், செப்டம்பர் 13 முதல் தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தைத் தொடங்கினார். அதன்படி திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். கடந்த செப்டம்பர் 27 அன்று அவர் கரூரில் பிரசாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தார்கள். அச்சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், விஜய் தனது பிரசாரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்.

பின்னர், கடந்த நவம்பர் 5 அன்று தவெக சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அதில் விஜய் பங்கேற்றார். அதன்பின் சேலத்தில் தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தைத் தொடர டிசம்பர் 4 அன்று அனுமதி வழங்கக் கோரி தவெக தரப்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டதாகச் செய்தி வெளியானது. ஆனால், அன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது.

இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை தவெக தலைவர் விஜயின் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிடுள்ளார்.

Summary

Tamilaga Vettri Kazhagam leader Vijay will resume public meetings from tomorrow, party general secretary N. Anand has announced.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in