தவெக கிறிஸ்துமஸ் விழா: பைபிளில் இருந்து குட்டிக்கதை சொன்ன விஜய் | TVK Vijay |

இதனால்தான் தவெகவின் கொள்கைக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.....
தவெக கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய விஜய்
தவெக கிறிஸ்துமஸ் விழாவில் உரையாற்றிய விஜய்
1 min read

பைபிளில் இளைஞர் ஒருவருக்கு சகோதரர்களே துரோகம் செய்த கதை வருகிறது. அந்தக் கதை யாரைப்பற்றியது என்று உங்களுக்கே தெரியும் என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் குழந்தைகள் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, விஜய்க்கு ஊட்டி விட்டுக் கொண்டாடினார்கள். முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய் பேசியதாவது:-

“இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும் தானே அனைத்துக்கும் அடிப்படை. இவை இரண்டும் இருக்கும் மனம் தானே தாயின் மனம். நம் தமிழ்நாடும் அப்படிப்பட்ட தாயன்பு கொண்ட மண் தானே. ஒரு தாய்க்கு எல்லாப் பிள்ளைகளும் ஒன்றுதானே. அதனாலே தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று எல்லாப் பண்டிகைகளிலும் எல்லாரும் சந்தோஷமாகப் பகிர்ந்து கொள்ளும் ஊர் தானே நம்மூர். இங்கு வாழ்க்கையும் வழிபாட்டு முறைகளும் வேறு வேறு என்றாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் தானே.

நாம் அரசியலுக்கு வந்ததும், கடவுள் நம்பிக்கை உண்டு என்று அறிவித்தோம். அது ஏனென்றால் உண்மையான நம்பிக்கை நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்கக் கற்றுக் கொடுக்கும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்துவிட்டாலே போதும், எந்தப் பிரச்னைகளையும் ஜெயிக்க முடியும். நம்பிக்கையின் வலிமையைப் பற்றி பைபிளில் நிறைய கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு கதையைச் சொல்கிறேன். இளைஞர் ஒருவருக்கு எதிராக அவரது சகோதரர்களே பொறாமைப்பட்டு அவரைக் கிணற்றில் தள்ளி விட்டார்கள். அதிலிருந்து அந்த இளைஞர் மீண்டு வந்து, அந்த நாட்டுக்கே அரசனாகி, தனக்கு துரோகம் செய்த சகோதரர்களையும் சேர்த்து எப்படிக் காப்பாற்றினார் என்ற கதை பைபிளில் இருக்கிறது. இந்தக் கதை யாரைப் பற்றியது என்பது நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். உங்களுக்கே தெரியும்.

தமிழக வெற்றிக் கழகம் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியோடு இருக்கிறது. அதில் எந்தவித சமரசமும் கிடையாது. அதனால்தான் தவெகவின் கொள்கைக்கு மதச்சார்பற்ற சமூக நீதி கொள்கை என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்” என்றார்.

Summary

In the Bible, there is a story about a young man being betrayed by his own brothers. You know who that story is about, said TVK leader Vijay.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in