
சென்னை ராயப்பேட்டையில் இஸ்லாமியர்களுடன் இணைந்து இஃப்தார் நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 7) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதை ஒட்டி, 1500-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொள்ளும் வகையில் விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து இன்று மாலை 5.30 மணி அளவில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திற்கு வருகை தந்தார் விஜய். வழக்கமான உடையை தவிர்த்துவிட்டு வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து தலையில் தொப்பு அணிந்திருந்தார். ராயப்பேட்டை மற்றும் அதைச் சுற்றி உள்ள ஜமாத்தைச் சேர்ந்த இமாம்கள் உடனிருந்தார்கள்.
அதன்பிறகு நோன்பு திறக்கும் இடத்திற்கு சென்று, இஸ்லாமியர்களுடன் இணைந்து நோன்பு திறந்தார் விஜய். பின்னர், அவர்களுடன் இணைந்து அவர் தொழுகையில் ஈடுபட்டார். இதனை அடுத்து, மேடையில் நின்றவாறு விஜய் கூறியதாவது,
`எனது அன்பான இஸ்லாமியப் பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் என் வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையைப் பின்பற்றி, மனித நேயத்தையும், சகோதரத்துவத்தையும் பின்பற்றும் இங்கிருக்கும் அனைத்து இஸ்லாமிய சொந்தங்களும் என்னுடைய அன்பான அழைப்பை ஏற்று இதில் கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அனைவரும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.
இந்நிகழ்வில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.