

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பங்களிடம் தவெக தலைவர் விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக அவரைச் சந்தித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை கூட்டம் நடந்தது. அப்போது ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக தரப்பில் ரூ. 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என விஜய் அறிவித்தார். அதன்படி பாதிக்கப்பட்டோர் வங்கிக் கணக்குகளில் நிவாரணத் தொகை செலுத்தப்பட்டது. மேலும், சமீபத்தில் வீடியோ காலில் அனைவருடனும் பேசி அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது விரைவில் கரூருக்கு வந்து அனைவரையும் சந்திப்பதாக விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது கரூர் பயணம் தொடர்ந்து தடைபட்டது.
இதையடுத்து நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேற்று (அக்.27) தவெக தலைவர் விஜய், சென்னைக்கு வரவைத்துச் சந்தித்தார். கரூரில் இருந்து சொகுசுப் பேருந்து மூலம் அழைத்து வரப்பட்ட குடும்பத்தினர் மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு, அங்கு விஜயைச் சந்தித்தார்கள். அவர்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டு, ஆறுதல் கூறியதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், விஜயைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ளனர். அதில், விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாகவும், மிகவும் மனமுடைந்து காணப்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, கரூரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கூறியபோது, “நாங்கள் எட்டு பேர் விஜயைப் பார்க்கச் சென்றிருந்தோம். எங்கள் அனைவரையும் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். விஜயைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது. மனதளவில் உடைந்துவிட்டார். அன்று பார்த்ததை விட இளைத்துவிட்டார். அவர் எங்களுக்கு ஆறுதல் கூற அழைத்து, நாங்கள் அவருக்கு ஆறுதல் கூற வேண்டியதாக இருந்தது.” என்றார்.
வேணி என்பவர் கூறுகையில், ”எல்லா வசதிகளும் செய்து கொடுத்து எங்களை அழைத்துச் சென்றார்கள். விஜய் இருந்த அறையில் அவர் மட்டும்தான் இருந்தார். பாதுகாவலரோ நிர்வாகிகளோ யாரும் இல்லை. நாங்கள் அடித்திருந்தால் கூட யாரும் வந்திருக்க மாட்டார்கள். அப்படித் தனியாக அவர் மட்டும்தான் இருந்தார். பெண்களையும் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனதற்கு நாங்களும் அவரிடம் மன்னிப்பு கேட்டோம். எங்களிடம் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார். என்னை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எங்கள் எட்டு பேரிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.” என்றார்.
அவரது மகன் கூறியபோது, “தனி அறையில் விஜய் அமர்ந்திருந்தார். உள்ளே போனதும் முதலில் நாங்கள் மன்னிப்பு கேட்டோம். அவர் எங்கள் அம்மாவின் கால்களைப் பற்றிக் கொண்டு அழுதார். அதைப் பார்க்க எங்களுக்கே கஷ்டமாகிவிட்டது. உங்களுக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் செய்து தருவதாக உறுதியளித்தார்” என்று பேசினார்.
கூட்டத்தில் உயிரிழந்த தனுஜ் வர்ஷன் என்பவரது குடும்பத்தினர் கூறியபோது, “மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் எங்களைத் தங்க வைத்தார்கள். ஒவ்வொரு குடும்பமாகச் சென்று விஜயைச் சந்தித்தோம். எங்கள் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டார். நாங்கள் அவரைத் தடுத்து, அதெல்லாம் வேண்டாம் சார் என்று கூறினோம். கரூருக்கு விரைவில் வந்து உங்களைச் சந்திப்பேன் ஆனால் எப்போது என்று இப்போதைக்குச் சொல்ல முடியாது என்று கூறினார். ஆயுள் முழுவதும் உங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொடுக்கிறேன் என்று அவர் சொன்னார். ரூ. 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு திட்டத்தையும் எங்களுக்கு வழங்கினார். விஜய் மனதளவில் மிகவும் தளர்ந்து காணப்பட்டார். மன வேதனையில் இருக்கிறார். அவர் சட்டமன்ற தேர்தலில் வென்று கரூருக்கு வர வேண்டும் என்பது எங்களது ஆசை” என்றனர்.
People who met TVK leader Vijay have stated that he fell at the feet of the families who lost their lives in the Karur crowd crush and apologized.