மகளிருக்கு ரூ. 2,500; குடும்பத் தலைவிகளுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள்: தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் | TVK |

தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும்...
மகளிர் தின விழாவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்
மகளிர் தின விழாவில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய்
4 min read

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய், பொதுச்செயலாளர் என். ஆனந்த், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய விஜய், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியை வாசித்தார். அவர் கூறியதாவது:-

விஜய் அறித்த வாக்குறுதிகள்

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலனில், பாதுகாப்பில் அக்கறை செலுத்துவதே தவெகவின் அடிப்படை நிலைப்பாடுகளில் ஒன்று. இதை நம் கட்சியின் முதல் மாநில மாநாட்டிலேயே அறிவித்தோம். அதன்படி அதற்கெனத் தனி துறை ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கென தனி இலாகா உருவாக்கப்படும். அது எனது நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் இருக்கும். சமரசமற்ற பெண்கள் பாதுகாப்பை நோக்கிப் பயணிக்கும் நம் கனவு நனவாவது உறுதி என்பதே நமது தேர்தல் முதல் வாக்குறுதி.

மதிப்புமிகு மகளிர் திட்டம்

மக்கள் பணத்தை மக்களுக்கே திருப்பித் தருவது எப்படி ஓசி என்ற கேலிக்கு உள்ளாகும்? எப்படி இலவசம் என்று ஏளனமாகப் பார்க்கப்படும்? இப்படி வரையறுக்க எந்த அரசியல் கட்சிக்கும், தலைவருக்கும் உரிமை இல்லை என்பதை தவெக ஓங்கி உரைக்கிறது. இந்தியாவில் முதலிடத்தில் இல்லாத மாநிலங்களிலி கூட பெண்களுக்காக வழங்கப்படும் தொகை அதிகமாக உள்ளது. ஆனால் முதலிடத்தில் உள்ள மாநிலம் என்று தனக்கு தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசில் மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில் வெறும் ரூ. 1000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் தொகையால் மளிகை சாமான் வாங்குவது போன்ற அவர்களது முக்கிய செலவுகளில் ஒன்றாவது குறைந்தபட்சமாகவேனும் பூர்த்தி ஆக வேண்டும். அந்த எண்ணத்தின் அடிப்படையில் யோசித்ததால் நாம் அமைக்கப் போகும் மக்கள் அரசு, 60 வயது வரை உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதா மாதம் ரூ. 2,500 வழங்கும். இதில் மாநில மற்றும் மத்திய அரசின் ஊழியர்களாக உள்ளவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு. இப்படிச் செய்வதால் கூடுதலாகச் சில குடும்பங்கள் பயனடையும் நிலை ஏற்படும் என்பதை நம் தாய்மார்கள் ஏற்றுக் கொள்வர் என்பது நமக்குத் தெரியும்.

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்

நம் வீட்டு பெண்களுக்குப் பெரும் சுமையாக மாறி நிற்பதில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒன்று. தேர்தல் நெருங்கும் போது மட்டும் கேஸ் விலை குறைக்கப்படும். தேர்தல் முடிந்ததும் மீண்டும் விலை உயர்த்தப்படும். அந்த விலை உயர்வு நம் காதுகளில் புகை வரும் அளவிற்கும் கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கும் இருக்கும். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெண்களின் மனதை அறிந்து நம் எண்ணத்தில் தோன்றியதுதான் இந்த அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டிற்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கட்டணம் இன்றி வழங்கப்படும்.

அண்ணன் சீர் திட்டம்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிகப்பெரிய மகிழ்வைத் தருவது அந்த குடும்பத்தில் நடக்கும் திருமணக் கொண்டாட்டம்தான். அதை எந்த வருத்தமும் இன்றி முழு மன நிறைவுடன் கொண்டாட வேண்டும். அதற்காகவே நம் தங்கைகளின் திருமணத்திற்காக 8 கிராம் அதாவது ஒரு பவுன் தங்கமும், தரமான பட்டு சேலையும் தாய் வீட்டிலிருந்து அண்ணன் சீராக அளிக்கப்படும்.

காமராஜர் கல்வி உறுதி திட்டம்

கல்வி கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜரைக் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏற்றது தமிழக வெற்றி கழகம். நமது கல்வி சார்ந்த கனவுகளில் ஒன்றாக கல்வி இடைநிற்றல் என்பதை இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள திட்டம்தான் காமராஜர் கல்வி உறுதி திட்டம். இடை நிற்றலுக்கான காரணங்களில் ஒன்றாகப் பொருளாதாரக் குறைபாடும் இருக்கிறது. இதை உணர்ந்ததால் தான் 1-12 வகுப்புகள் வரை எந்த குழந்தையும் கல்வி இடைநிற்றலுக்கு ஆளாகவே கூடாது என்று எண்ணுகிறோம். அந்த எண்ணத்தின்படி நம் விருப்பத்தை நிறைவேற்ற இடை நிற்றலே இல்லாமல் செய்வதற்காக ஒவ்வொரு தாய்க்கும் அல்லது பாதுகாவலருக்கும் ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும்.

வெற்றி பயணம் திட்டம்

கட்டணமில்லாப் பேருந்து பயணம் என்று அறிவித்துவிட்டு, அது பிங்க் பஸ்ஸில் மட்டும்தான் என்று கட்டுப்பாடு விதித்ததால், பள்ளி கல்லூரி செல்லும் மாணவிகள் முதல் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட குறிப்பிட்ட அந்த ஒரு பேருந்துக்காக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. எனவே அந்த நிலை மாற வேண்டும். மேலும் குடும்பங்களில் ஏற்படும் சூழலால் அவசர மற்றும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படும். அது போன்ற நேரங்களில் கையில் காசில்லை என்றால் அந்த பயணத்தை கவலையுடன் தவிர்க்க வேண்டிய நிலையும் ஏற்படும். இதுபோன்ற தர்ம சங்கடமான நிலையை தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்தின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் பயணிக்கும் வகையில் உத்தரவிடப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தும் எந்த இடத்திற்கும் அனைத்து பெண்களும் கட்டணம் இன்றி பயணிக்கலாம். மேலும், பேருந்துக்காக காத்து கிடக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது 0% சகிப்புத்தன்மை

பெண்களுக்கு எதிரான குற்றமே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் மீது 0% சகிப்புத்தன்மை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது நம் மிகப்பெரிய கனவு. இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை, விமான பணிப்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை என இந்த கொடுமைகளில் ஈடுபட்டதே திமுக நிர்வாகி ஒருவரும், திமுக கவுன்சிலர் ஒருவரும் தான் என்பது செய்திகள் வழியாக எல்லாரும் அறிந்த ஒன்று. இதையெல்லாம் தடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணி வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும். சாதாரண உடையில் இருக்கிற இந்த படையைச் சேர்ந்த பெண்கள் உடலில் கேமரா பொருத்தப்பட்டு, ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 500 குழுக்கள் அமைக்கப்பட்டு. பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு பெண்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்படும். இவற்றில் பெண்களுக்கு எதிரான வழக்குகள் எதுவும் இனி நிலுவையில் இல்லாத நிலை ஏற்படும். விசாரணை முறையாக நடத்தப்பட்டு தீர்ப்பும் விரைவாக வழங்கப்படும். இதுக்குதான் மகிளா கோர்ட் இருக்கிறதே என்று சிலர் கூச்சல் போட ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இது பெண்களுக்காக மட்டுமே.

பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பிற்காக ஸ்மார்ட் பேனிக் பட்டன்ஸ் அறிமுகப்படுத்தப்படும். இந்த பட்டன்கள் 24/7 ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டதாக இருக்கும். இவை தனியார் ஷேர் ஆட்டோகள் உட்பட அனைத்து பொது போக்குவரத்து வாகனங்களிலும் பொருத்தப்படும். இந்த பட்டன்கள் வழியாக ஐந்து நிமிடத்தில் பதிலும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சிசிடிவி கேமராக்களும் விளக்குகளும் வெளிச்சமும் இல்லாத இடங்களே இல்லை என்ற வகையில் உருவாக்கப்படும். பெண்கள் பாதுகாப்பை 24/7 கண்காணிக்க முடியுமா என்ற கேள்விக்கான பதிலாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்களைக் கண்காணிக்கவும் அவசர நிலைகளை அந்த நேரத்திலேயே அதற்கான விரைவான பதிலை உறுதி செய்யவும் அதி நவீன கட்டளை மையங்களை அமைத்து பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். அடுத்து பெண்களுக்கு மிகவும் தேவையான நாட்களில் பொது விநியோகம் நடக்கும் இடங்களான ரேஷன் கடைகள் மற்றும் பள்ளிகள் கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிட்டரி நாப்கின்கள் வழங்குவது உறுதி செய்யப்படும்.

சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்

நிலுவையில் உள்ள கடன்களை திருப்பி செலுத்துவதன் மூலமும் பெண்கள் நடத்தும் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா நிதியை வழங்குவதன் மூலமும் சுய உதவி குழுக்களின் உற்பத்தி திறன் மேம்படுத்தப்படும் சுய உதவி குழுக்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட சிறு குறு வணிகர்களாக மாறுபவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் அதாவது 100% மானியமாகவே வழங்கப்படும்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்

உலகில் மனிதனாகப் பிறப்பதே பெரிய விஷயம், அதிலும் தாய்நாடான தமிழ்நாட்டில் பிறப்பது வரம். அப்படி நம் தமிழ்நாட்டில் பிறக்கிற குழந்தைகளை வரவேற்கும் திட்டம் தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அரசாங்கத்தின் ஆசீர்வாதமாக ஒரு தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே ஒரு பேபி வெல்கம் கிட்டும் வழங்கப்படும். இவையெல்லாம் சும்மா சாம்பிள் தான். வாக்குறுதிகள் தயாராகிக் கொண்டிருக்கிறது. வரும் நாள்களில் சொல்கிறேன்” என்றார்.

Summary

Vijay, the leader of the TVK, participated in the International Women's Day celebration organized by the party and announced his election promises.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in