தேர்தல் அறிக்கை சிறப்பு குழு அமைப்பு: தவெக அறிவிப்பு | TVK |

திமுக, அதிமுகவைத் தொடர்ந்து தவெகவும் தேர்தல் அறிக்கை குழு அமைத்துள்ளது...
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)
1 min read

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை அமைத்து அக்கட்சி தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதற்காக ஏற்கெனவே திமுக மற்றும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் மாநிலம் முழுவதிலும் வெவ்வேறு துறையினரைச் சந்தித்து, அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கைகள் தயார் செய்யப்படவுள்ளன.

தவெக தேர்தல் அறிக்கை குழு

இதற்கிடையில் திமுக, அதிமுகவைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகமும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க 12 பேர் அடங்கிய சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. குழு குறித்த விவரங்களை விஜய் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது.

இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழு, தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார & தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள். கல்வியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் இடம்பெறவில்லை

இந்தக் குழுவில் கொள்கைப் பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ், கொள்கை பரப்புச் செயலாளர் ராஜ்மோகன், தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால், தவெக மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இடம்பெறாதது பேசுபொருளாகி இருக்கிறது.

Summary

Tamilaga Vettri Kazhagam leader Vijay has announced that a committee has been formed to prepare an election manifesto

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in