

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார். அவர் மதியம் 1 மணிக்கு உரையாற்றிய நிலையில், திறந்தவெளியில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்ததால் கடுமையான வெய்யிலின் தாக்கம் இருந்தது. இதனால் சிலர் மயக்கமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு உடனேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிராவை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளியான சூரஜ் என்பவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது, அவர் வழிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கிய நிலையில், இதுகுறித்து செய்தி சேகரித்த செய்தியாளர்களிடம் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. பிறகு அப்பகுதியில் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் கலைந்து சென்றனர்.
சுராஜுக்கு உடல்நலக் குறைவு இருந்ததா?
இதற்கிடையில் சுராஜுக்கு ஏற்கெனவே உடல்நலக் குறைவு இருந்ததாகவும் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படும் நிலையில், அவரது நண்பர் மணிகண்டன் அதனை மறுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது: “சுராஜ் வெள்ளி பட்டறை வைத்து தொழில் செய்து வருகிறார். நன்றாகத்தான் இருந்தார். அவருக்கு எந்தவித உடல்நல பிரச்னையும் இல்லை. விஜயைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. சம்பவம் கேள்விப்பட்டு நாங்கள் வந்திருக்கிறோம். அவருக்கு உடல்நிலையில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தவெக இரங்கல்
இதையடுத்து தவெக சார்பில் அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார், தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “இன்று தவெக சார்பில் சேலதில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேம்” என்று பதிவிட்டுள்ளார்.
சி.டி.ஆர் நிர்மல் குமார் விளக்கம்
தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
“சூரஜ் உயிரிழந்த செய்தியால் நாங்கள் வருத்தமடைந்துள்ளோம். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பம் மூலம் அறிந்தோம். அவருக்குத் தேவையான அனைத்து முதலுதவிகளையும் நாங்கள் செய்து அவரை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார். எங்கள் தொடர்கள் அவரது குடும்பத்துடன் இருந்து ஆதரவளிக்கிறார்கள். சேலம் பொதுக்கூட்டத்திற்கு 4,998 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அதைவிடக் குறைவாகவே நாங்கள் ஆட்களை அனுமதித்தோம். அங்கே 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருந்தனர். மினி கிளினிக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து ஆம்புலன்ஸ்களும் அவசர நிலைக்குத் தயாராக இருந்தன. எங்களுக்கு மதியம் 12 முதல் 3 மணி வரை அனுமதி இருந்தது. எங்கள் தலைவர் விஜய் மதியம் 1 மணி அளவில் பேசினார். பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம். இதைத் தவிர வேறு எந்த சம்பவமும் நடக்கவில்லை” என்று விளக்கமளித்தார்.
Tamilaga Vettri Kazhagam's joint general secretary CTR Nirmal Kumar has posted regarding the death of a person who attended Vijay's public meeting in Salem.