விஜயை 2026-ல் முதல்வராக்க சபதம் ஏற்போம்: தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் | TVK | Vijay |

விஜய்தான் முதல்வர் வேட்பாளர், கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்குத்தான் அதிகாரம்...
தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் என். ஆனந்த்
தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பொதுச்செயலாளர் என். ஆனந்த்
2 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை 2026-ல் முதலமைச்சராக அமர வைக்க அனைவரும் சபதம் எடுக்க வேண்டும் என்று தவெகவின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் பேசினார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். மேலும், கட்சியின் அடுத்த கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கச் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய், பொதுசெயலாளர்கள் என். ஆனந்த், சி.டி.ஆர். நிர்மல் குமார், பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தச் சிறப்பு பொதுக்குழுவில் 12 சிறப்புத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. 2026 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விஜய், தவெக கூட்டணி குறித்து தீர்மானிக்க விஜய்க்கே அதிகாரம் உள்ளது என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய தவெக பொதுச்செயலாளர் என் ஆனந்த் கூறியதாவது:-

“நாம் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. எண்ணற்ற சோதனைகளை சந்தித்து வந்திருக்கிறோம். பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். இன்று அரசியலின் மையப்புள்ளி விஜய்தான். நமது தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டு ஒன்பது மாதம் நிறைவடைந்துள்ளது. இந்த கணக்கு நாம் அதிகப்பூர்வமாக மக்களுக்கு அறிவித்தது. ஆனால், நம் தலைவர் விஜயின் உழைப்பும் உங்களுடைய அர்ப்பணிப்பும் மக்களோடு நமக்கு இருக்கும் பாசம் 30 ஆண்டுகளை தாண்டி தனி வரலாறு இது.

இது அனைத்திற்கும் அடித்தளம் ஒரு மனிதர் மட்டும்தான் அவருடைய வழிகாட்டுதலும் தியாகமும் மிகவும் பெரியது. 30 ஆண்டுகளுக்கு மேல் இந்த மண்ணோடும் மக்களோடும் ஒவ்வொருவரின் வீட்டுப் பிள்ளையாகவும் மாறியுள்ளவர்தான் நம் தலைவர் விஜய். நம்முடைய எதிரிகள் ஒன்றை புரிந்து கொள்ளவில்லை. யாரும் விஜயை எளிமையாக அசைத்து பார்க்க முடியாது. ஏனென்றால் இவர் மக்களின் நம்பிக்கை. தாய்மார்களின் நம்பிக்கை. தமிழ் மண்ணின் நம்பிக்கை.

இது வெறும் பொதுக்குழு கூட்டம் அல்ல இது நம்முடைய லட்சிய பயணத்தின் ஒரு வரலாற்று திருப்பம். நம்முடைய கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தவும் நம்முடைய கரங்களை மேலும் பலப்படுத்தவும் நாம் இங்கு கூடியிருக்கிறோம். ஒரு மாபெரும் இயக்கத்திற்கு கட்டுப்பாடு என்பது மிகவும் அவசியம் நாம் அனைவரும் தலைவரின் முடிவுக்கு கட்டுப்பட்ட ஒரு தாய் பிள்ளைகளாக செயல்பட வேண்டும். நமது பலமே நமது கட்டுக்கோப்புதான். அதை சீர்குலைக்க நினைக்கும் எதிரிகளை நாம் அனுமதிக்கக் கூடாது. நம் தலைவர் விஜய் 2026-ல் முதலமைச்சராக அமர்வதற்கு நாம் எல்லோரும் சபதம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அந்த மாற்றத்தை கொண்டு வரும் மாபெரும் சக்தியாக நாம் இருக்கிறோம்” என்றார்.

Summary

The General Secretary of Tamizhaga Vettri Kazhagam, N. Anand, spoke that everyone should take an oath to seat Vijay, the leader of the TVK, as Chief Minister in 2026.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in