புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்: கட்டுப்பாடுகளைப் பின்பற்ற என். ஆனந்த் அறிக்கை | TVK |

தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.....
என். ஆனந்த் (கோப்புப்படம்)
என். ஆனந்த் (கோப்புப்படம்)படம்: https://x.com/TVK_Thanjai/status
2 min read

புதுச்சேரியில் டிசம்பர் 9 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அது தொடர்பான அறிவிப்புகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“நாளை (09.12.2025, செவ்வாய்க்கிழமை) புதுச்சேரி, உப்பளத்தில் காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் 'புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி’ நடைபெற உள்ளது. காவல் துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த, கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் மாவட்டங்கள் உட்பட, தமிழ்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் தலைவர் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அனுமதி இல்லை. இவர்கள் வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

2. நம் தலைவர் அவர்கள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்களிலோ அல்லது வேறு வாகனங்களிலோ பின்தொடர்வது, போக்குவரத்திற்கு இடையூறாகச் செயல்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.

3. காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, விதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும். போக்குவரத்து விதிகளை முழுவதுமாகப் பின்பற்ற வேண்டும். அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி இல்லை. எனவே கழகத் தோழர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. வாகனங்களை நிறுத்துவதற்குக் காவல் துறை அனுமதித்துள்ள பாண்டி மெரினா பார்க்கிங், பழைய துறைமுகம் மற்றும் இந்திராகாந்தி ஸ்டேடியம் பின்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும். வேறு இடங்களிலோ அல்லது போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாகவோ கண்டிப்பாக வாகனங்களை நிறுத்தக் கூடாது.

5. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலோ அல்லது அங்கே செல்வது மற்றும் திரும்பி வருவது உள்ளிட்ட வழிகளிலோ சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும். பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.

6. எளிதில் அடையாளம் காணும் வகையில் கழக நிர்வாகிகள் தலைமைக் கழகத்தால் வழங்கப்படும் பேட்ஜ் அணிந்தும், தன்னார்வலர்கள் சீருடை அணிந்தும் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

7. உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.

8. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள், வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள் ஆகியவற்றின் மீது ஏறக் கூடாது. மின்விளக்குக் கம்பங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள் ஆகியவற்றின் அருகில் செல்லக் கூடாது. சிலைகள் மற்றும் அவற்றைச் சுற்றி ஏதும் பாதுகாப்பு கிரில் கம்பிகள், தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

9. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது. அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும். பொது மக்களுக்கும். வாகன ஓட்டிகளுக்கும். பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

10. தலைவர் அவர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவரும் அமைதியான முறையில், யாருக்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் கலைந்து செல்ல வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெற்றியடைய. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

Summary

With the TVK leader's public meeting scheduled to be held in Puducherry on December 9, the party's general secretary N. Anand has issued announcements in this regard.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in