தவெகவின் முதல் மாநில மாநாடு இன்று (அக்.27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலையில் நடைபெறுகிறது. இதனை ஒட்டி மாநாட்டுப் பந்தலில் இன்று காலை முதலே தொண்டர்கள் குவிய ஆரம்பித்துள்ளனர். 11 மணி நிலவரப்படி சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் மாநாட்டுப் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் கூடியுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
நிகழ்ச்சி நிரல் பட்டியலின்படி, மதியம் 2 மணிக்கு மேல் மாநாட்டுப் பந்தலில் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. மாலை 4 முதல் 4.30 மணிக்குள் மாநாட்டுப் பந்தலில் கட்சிக் கொடியை ஏற்றும் விஜய், அதன் பிறகு 6 மணிக்கு சிறப்புரை ஆற்றுகிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாடு நடக்கும் பகுதிக்கு வாகனங்களில் தொண்டர்கள் குவிந்து வருவதால் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு அங்குள்ள சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மாநாடு நடக்கும் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உள்ள வாகன வழித்தடங்களில் ஒரு வழித்தடம் மட்டும் தவெக மாநாட்டிக்கு செல்லும் வாகனங்களுக்காக ஒதுக்கித் தரப்பட்டுள்ளது.
நேரம் செல்ல செல்ல தவெக மாநாடு நடக்கும் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அடுத்தடுத்து தொண்டர்கள் சிலர் மயக்கமடைந்து வருகின்றனர். மயக்கமடையும் தொண்டர்களுக்கு முதலுதவி அளிக்கும் பணியை அங்குள்ள மருத்துவக்குழு மேற்கொண்டு வருகிறது.
மேலும், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் குழந்தைகள் மற்றும் சிறார்களை தங்களுடன் அழைத்து வரவேண்டாம் என்று தவெக தலைவர் விஜய் கடிதம் வாயிலாக ஏற்கனவே அறிவுறுத்தியுள்ள நிலையில், கைக்குழந்தைகள் மற்றும் சிறார்களை அழைத்துகொண்டு பல தொண்டர்கள் வந்துள்ளனர்.