விஜய் காரின் முன் பெண் நிர்வாகி மறியல்: சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம் | TVK | CTR Nirmal Kumar |

திமுகவை விட தவெக பெரிய இயக்கம். திமுகவை விட அதிக நிர்வாகிகள் இருக்கிறார்கள்....
சிடிஆர் நிர்மல் குமார் (கோப்புப்படம்)
சிடிஆர் நிர்மல் குமார் (கோப்புப்படம்)
2 min read

தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று பெண் நிர்வாகி பனையூரில் விஜயின் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் பலகட்டமாக அறிவிக்கப்பட்டு, அறிவிப்பாணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் செயலாளர் பதிவி உள்ளட்டவை அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி பனையூரில் நடந்தது. அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது பெயர் மாவட்டச் செயலாளர் பட்டியலில் இல்லாததை எதிர்த்து, தவெக அலுவலகத்தின் வாயிலில் இன்று காலைமுதல் தனது ஆதரவாளர்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் அஜிதா ஈடுபட்டிருந்தார்.

விஜய் கார் முன் போராட்டம்

பகல் 1 மணியளவில் தவெக அலுவலகத்துக்கு வருகை தந்த கட்சியின் தலைவர் விஜயின் காரை மறித்து அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் போராட்டக்காரர்களை விலக்கிய நிலையில், விஜய் காரை நிறுத்தாமல் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து, அஜிதாவிடம் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிடிஆர் நிர்மல்குமார் விளக்கம்

இந்நிலையில், தவெக துணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அவர் கூறியதாவது:-

“ஆரம்பத்தில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டபோது அதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இருந்திருக்கிறார்கள். மாவட்டத்திற்கு 500 முதல் 1000 நிர்வாகிகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கட்சியில் பொறுப்பு வழங்குவதற்காக நேர் செய்யும்போது ஒவ்வொரு இடத்திலும் சில மன வருத்தம் ஏற்படுவது உண்டு. கட்சியில் தலைவர் விஜயின் வழிகாட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் எந்தெந்த மாவட்டங்களில் யாருக்குப் பொறுப்பு வழங்க வேண்டும் என்று திட்டமிட்டு வழங்கியிருக்கிறார். இது அனைத்துக் கட்சியிலும் இருக்கும் பிரச்னைதான். ஆனால் உழைத்தவர்கள் யாரையும் தவெக தலைவர் கைவிட மாட்டார். அவர்களுக்குத் தேவையான பொறுப்புகளைப் பார்த்து விஜய் வழங்குவார். இதற்காக காலையிலிருந்து செய்தியாளர்கள் இங்கு காத்திருந்து, முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் கொடுக்காத மரியாதையை பனையூருக்குக் கொடுத்த செய்தி தொலைக்காட்சிகளுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது சாதாரண விஷயம்.

திமுகவை விட தவெக பெரிய கட்சி

கடந்த வாரம் அறிவாலயத்தில் ஒரு எம்.எல்.ஏவே அடையள அட்டையைக் கிழித்துத் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். அதைவிடவா இங்கே நடந்துவிட்டது? ஒரு கட்சி என்றால் நிர்வாகி நியமனத்தில் ஒரு சிலருக்கு மனவருத்தம் ஏற்படும். திமுகவை விட தவெக பெரிய இயக்கம். திமுகவை விட அதிக நிர்வாகிகள் இருக்கிறார்கள். திமுகவை விட அதிக ஜனநாயகம் தவெகவில் உள்ளது. திமுகவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறுநில மன்னர்களாக இருக்கிறார்கள். திருச்சி என்றால் கே.என் நேரு. நாங்கள் அப்படி இல்லை. இது முற்றிலும் ஜனநாயகம் உள்ள கட்சி. அஜிதாவை சந்தித்து நான் பேசியிருக்கிறேன். நிச்சயமாக விஜயும் அழைத்துப் பேசுவார். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும்” என்றார்.

Summary

TVK Female Member blocked Vijay's car in Panaiyur and protested demanding the appointment of the Thoothukudi District Secretary.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in