தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்!

கட்சி உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
தவெக செயற்குழு கூட்டம் தொடக்கம்!
1 min read

தவெக தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (நவ.03) காலை தொடங்கியது.

கடந்த அக்.27-ல் தவெகவின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆற்றிய தலைமை உரை விமர்சனத்துக்கும், வரவேற்புக்கும் உள்ளானது.

இந்நிலையில், மாநாடு நிறைவுற்ற பிறகு தவெகவின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், அக்கட்சியின் செயற்குழு மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறும் என்ற செய்தி வெளியானது.

முதலில் காலை 10 மணிக்கு, தவெக பொதுச்செயலாளர் ஆனந்த தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு தவெக செயற்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் காலை 11 மணி அளவில் தொடங்கியது.

கட்சியின் முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றதற்காக, கட்சி நிர்வாகிகளுக்கு இந்தக் கூட்டத்தில் விஜய் நன்றி தெரிவிப்பார் என கூறப்படுகிறது. மேலும், தவெகவின் உட்கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

தவெகவுக்கான உறுப்பினர் சேர்க்கை கடந்த மார்ச் 11-ல் விஜய் தொடங்கிவைத்த பிறகு தற்போது வரை அக்கட்சியில் உறுப்பினர்களாக சுமார் 58 லட்சம் நபர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இந்தக் கூட்டத்தில் தகுந்த அறிவுரைகள் வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது. அத்துடன் செயற்குழு கூட்டத்தில் தலைவர் விஜய் உரையாற்றுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in