
தவெகவின் முதல் மாநில மாநாடு திட்டமிட்டதற்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு முன்கூட்டியே தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று (அக்.27) தவெகவின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெறுகிறது. மாநாட்டுப் பந்தலில் சுமார் 50,000 பேர் அமரும் அளவில் இருக்கை வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிகாலை தொடங்கி மாநாட்டுப் பந்தலில் தவெக தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர்.
மதியம் 1 மணி அளவில் மாநாடு நடைபெறும் இடத்துக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெயிலின் தாக்கம் காரணமாக மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு சி.பி.ஆர். உள்ளிட்ட முதலுதவி சிகிச்சைகள் அங்கிருந்த மருத்துவ குழுவினரால் அளிக்கப்பட்டன.
காலை முதல் தொண்டர்கள் மாநாட்டுத் திடலில் குவிந்துள்ளதால் அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்கவேண்டாம் என்ற நோக்கில் முன்பு 4 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட மாநாடு, ஒரு மணி நேரத்துக்கு முன்பாக பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்குகிறது. 4 மணிக்கு மாநாட்டுப் பந்தலில் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறார் விஜய். கட்சியின் பொதுச்செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் பேசிய பிறகு இறுதியாக மாலை 6 மணிக்கு விஜய் உரையாற்றுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பெண்கள், விவசாயிகள், கல்வி உள்ளிட்ட தலைப்புகளில் மாநாட்டில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.