
கரூரில் மோசடி வழக்கில் கைதானவருக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கட்சியின் கரூர் மாவட்டத் தலைவர் மதியழகன் விளக்கமளித்துள்ளார்.
ராஜா என்பவர் கார் வாங்கியிருக்கிறார். இதற்கான ஆவணங்களாக அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவருடைய ஆவணங்களைக் கொடுத்துள்ளார். பிறகு, கார் வாங்கியதற்கான தவணைத் தொகையை சரிவர செலுத்தாத காரணத்தால், நிதி நிறுவனம் விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையின்போது தான் ஆசிரியை பெயரில் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. கைது செய்யப்பட்ட ராஜா தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்றும் செய்திகளில் கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் இந்தச் செய்தியை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழக கரூர் மாவட்டத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"கரூர் மாவட்டம் குளித்தலையில் மோசடி வழக்கில் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி என்று செய்திகள் வந்துகொண்டுள்ளன. கைது செய்யப்பட்ட ராஜாவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இவருக்கு தமிழக வெற்றிக் கழகத்திலோ அல்லது தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலோ எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதுவரை அவர் எந்த பொறுப்பிலும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடைபெறுகிறது. தொண்டர்கள் அனைவரும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.