தாமரை மலருக்குத் தரிசனம் செய்த முதல் அடிமை: தவெக தலைவர் விஜய் விமர்சனம் | TVK Vijay |

குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி, 1999 முதல் 2003 வரை தாங்கள் அடைக்கலமாகி...
TVK Chief Vijay Writes letter to his party followers
ஈரோட்டில்...
2 min read

பாஜகவுடன் திமுக முன்பு கூட்டணி வைத்ததை விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவ்வப்போது தனது தொண்டர்களுக்குக் கடிதம் எழுதுவது வழக்கம். அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு மாவட்டத்தில் தவெகவுக்கு தொண்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததைக் கவனிக்க முடிந்தது. இதைக் குறிப்பிட்டு தவெக தலைவர் தனது தொண்டர்களிடம் மனம் திறந்து பேசியுள்ளார். இதில் வழக்கம் திமுகவை விமர்சித்துக் குறிப்பிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தை "சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்கள்" என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம், அதைத் திட்டமிட்டச் சதி என்பதை மீண்டும் நினைவுபடுத்தியிருக்கிறார் விஜய்.

இதுதொடர்பாக எக்ஸ் தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

"சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம்.

அதிலும் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கோ இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத எண்ணிலடங்கா நிபந்தனைகள். அதிகார முகமூடியின் எண்ணங்களே நிர்பந்தங்களாகவும் நெருக்கடிகளாகவும் நம்முன் வைக்கப்பட்டன. அத்தனையையும் அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்காகக் குரல் கொடுத்துவிட்டு வந்தோம்.

நம்மை முடக்க நினைத்தவர்கள், மக்கள் நம்முடன் முன்னைவிட அதிகமாக, அதீதப் பாசத்துடன் ஆணித்தரமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்து விழிபிதுங்கி தங்கள் மூளைத்தறி முடங்கி முனகத் தொடங்கினர்.

நமக்கு எதிராகத் தலையங்கம் என்ற பெயரில் பிழையங்கம் எழுதியதும் அவர்கள்தான். நம்மால் கூட்டம் சேர்க்க இயலாது என்று எழுதிய அவர்களே கூட்டம் சேருகிறது என்றும் எழுதினர். முரசொலியாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எழுதியது முரணொலியாக மாறிப் போனது. இதைப் பார்த்து, பரணில் கிடக்கும் அவர்களின் பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறதாம்.

தாங்கள் தெரிந்தே இட்ட கையெழுத்தையே தெரியாமல் இட்டுவிட்டதாகத் தகிடுதத்தம் செய்த முரண்களின் முன்னேற்றக் கழகத்தினர், நம்மீது அவதூறு பூசலாம் என்ற நப்பாசையில், தங்கள் முகமூடியைத் தாங்களே கழற்றிக்கொண்டனர்.

ஆம். அவர்கள் கட்சியின் தலைவரான முதல்வரே பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணிக் களிப்புறுகின்றார். பாவம் அவர்கள், தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்புதான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்துவிட்டனர்.

குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி, 1999 முதல் 2003 வரை தாங்கள் அடைக்கலமாகி, முதல் அடிமையாக இருந்து, தமிழ்நாட்டில் தாமரை மலருக்குத் தரிசனம் செய்து தாங்கள் இருந்த இடத்தை மறைக்க முடியாமல், மனத்தில் இருந்ததை ஒருவித மறதியால் பேசி இருக்கலாமோ? காரணம் எதுவாயினும் கொண்டையை மறைக்க இயலாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது.

வழியெங்கும் வாஞ்சையுடன் நின்று நம் மக்கள் நம்மை வரவேற்பதைப் பார்க்கும் அவர்களுக்கு, வாக்குச்சாவடி முன்பும் இதேபோல அணிதிரண்டு வந்து நமக்காக நிற்பார்கள்; நமக்கே வாக்களிப்பார்கள் என்பதை எண்ணி எண்ணி இப்போதே குமைச்சல் அடைகின்றனர்.

அதிலும் குறிப்பாக இளைஞர் பெருங்கூட்டமும் பெண்கள் பெரும்படையும் நம்முடன் மனத்தளவிலும் உறுதியாக இணைந்துவிட்டனர். அதை ஆழமாக அறிந்ததால் தான் அவர்களை விவகாரமாகப் பேச வைக்கிறது.

இனி, அவர்களின் ஏசுதலையும் ஏகடியம் பேசுதலையும் புறந்தள்ளி மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகம் என்றாலே தகுதி மிக்க, தரம் மிக்க, ராணுவக் கட்டுப்பாடு மிக்க, கண்ணியம் மிக்க அரசியல் போர்ப் பெரும்படை என்பதைத் தரணிக்கு உணர்த்த வேண்டும். உணர்த்தியே ஆக வேண்டும்.

நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் நரித் தந்திரச் சூழ்ச்சிகளை ஆழமாகப் புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை எனில் அவர்களின் வாக்குரிமை உறுதியாக, நம் கழகத் தோழர்கள் விரைந்து உதவிட வேண்டும்.

புதிய வாக்காளர்களில் ஒருவர்கூட விடுபடாமல் பார்த்துப் பார்த்துச் சேர்க்க வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம்.

அந்த வாக்குகள் அனைத்தும் த.வெ.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னத்திற்கானது என்பதை என்பதை உறுதிப்படுத்த, நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

இச்சூழலில், நாம் ஏற்கெனவே சொன்னது போல, செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி. அதை மனத்தில் கொண்டு, தொடர்ந்து களமாடுங்கள். தொய்வின்றிக் களமாடுங்கள். இப்போதே துரிதமாகக் களமாடுங்கள்.

விவேகம் இன்னும் விசாலமாகட்டும். வெற்றி நம் விலாசமாகட்டும்.

வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்" என்று விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Vijay | Tamilaga Vettri Kazhagam | DMK | BJP |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in