வேங்கைவயல் விவகாரத்தில் எஸ்ஐடி விசாரணை தேவை: விஜய்

"ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும்."
வேங்கைவயல் விவகாரத்தில் எஸ்ஐடி விசாரணை தேவை: விஜய்
1 min read

வேங்கைவயல் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரணை நடத்த வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரத்தில் புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு ஜனவரி 24 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இது தொடர்பான செய்தி வெளியானதும், பட்டியல் சமூகத்தினரைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இந்த வழக்கை விரைவில் நடத்தி முடிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தார்கள். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற குரல்கள் திமுகவின் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தே வலுத்தன.

இதுதொடர்பாக விளக்கமளித்த தமிழ்நாடு அரசு, தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் செய்திக் குறிப்பை வெளியிட்டது.

இந்த நிலையில்தான், உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை தேவை என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விஜய் வலியுறுத்தியுள்ளதாவது

"வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்!

ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகின்றன எனில், அவற்றை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில் எவ்விதத் தவறும் இல்லை.

வேங்கை வயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் குறித்துப் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

எனவே, குறைகாணவே இயலாத நடுநிலையான பார்வையுடன் இந்த விவகாரத்தில், உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் மக்களுக்கும் சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிபிசிஐடி ஏற்கெனவே விசாரணை நடத்தி, கால தாமதமாக விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. ஒன்றிய அரசின் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் அது மேலும் கால தாமதத்தையே ஏற்படுத்தும். இது வேங்கை வயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.

வேங்கை வயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in