10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றி கண்ட 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மே 30 அன்று பாராட்டி ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆண்டுதோறும் தமிழ்நாடு முழுக்க தொகுதிவாரியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறார். இதன்படி, நிகழாண்டும் பொதுத்தேர்வுகளில் வெற்றி கண்ட மாணவ, மாணவியருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பாராட்டி உதவித் தொகை வழங்கவுள்ளார் விஜய்.
தமிழ்நாடு முழுக்க தொகுதிவாரியாக மூன்று கட்டங்களாகப் பிரித்து பாராட்டு விழா நடத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடர்புடைய அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வாயிலாக வெளியிட்டுள்ளார்.
"தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களைத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்ட உள்ளார்.
முதற்கட்டமாக மே 30 அன்று வெள்ளிக்கிழமை, மாமல்லபுரத்தில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஹோட்டலில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மாணவச் செல்வங்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தனிப்பட்ட முறையில் அன்பும் அக்கறையும் கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இந்தப் பாராட்டு விழாவில் மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல் திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 88 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விஜய் பாராட்டுகளைத் தெரிவிக்கவுள்ளார். மீதமுள்ள தொகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா குறித்த தேதி அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.