தமிழக வெற்றிக் கழக மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கட்சித் தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள வி. சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை வழிகாட்டுகள், கொள்கைகள், செயல் திட்டங்கள் உள்ளிட்டவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன.
மதச்சார்பற்ற சமூக நிதிக் கொள்கை, அரசியல் எதிரி திராவிட மாடல் ஆட்சி, கொள்கை எதிரி பிளவுவாத அரசியல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனப் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் மாநாட்டின் மூலம் கவனம் பெற்றன. இதுதொடர்புடைய விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.
மாநாடு நடைபெறுவதற்கு முன், இதுதொடர்பாக தொண்டர்களுக்குக் கடிதம் எழுதி வந்த விஜய், மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது நன்றி தெரிவித்து 4-வது கடிதத்தை எழுதியுள்ளார். கடிதத்தின் மூலம், "வி. சாலை நமது வியூகச் சாலையாகவும் விவேக சாலையாகவும் மற்றும் வெற்றிச் சாலையாகவும் ஆனது. போலவே, நம்மை வெல்ல இயலாத வித்தியாசமான, யதார்த்த அரசியல் சாலைக்கும் நம்மை அழைத்துச் செல்லும். எப்போதும் ஆக்கப்பூர்வமான அரசியலையே கையிலெடுப்போம். 2026-ல் நம் இலக்கை அடைவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.