மக்களாட்சியை நிலைநாட்டுவதே நம் இலக்கு: மதுரை மாநாடு குறித்து விஜய் அறிக்கை | TVK Vijay

"மதுரை மாநாட்டிற்கு முன்பும் பின்பும் கழகத் தோழர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்."
மக்களாட்சியை நிலைநாட்டுவதே நம் இலக்கு: மதுரை மாநாடு குறித்து விஜய் அறிக்கை | TVK Vijay
ANI
1 min read

மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்றது. மாநாட்டில் விஜய் பேசிய உரை விவாதத்துக்கு உள்படுத்தப்பட்டு, விமர்சனத்துக்கு உள்படுத்தப்பட்டு இரு நாள்கள் பேசுபொருளாக இருந்தது.

இந்நிலையில், மதுரை மாநாடு குறித்து தொண்டர்களுக்கு நன்றிக் கடிதத்தை எழுதி அறிக்கையாக வெளியிட்டுள்ளார் விஜய்.

தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளதாவது:

"விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெற்ற முதல் மாநில மாநாடு என்னை நெகிழ வைத்தது. ஆனால், மதுரையில் நிறைவுற்றிருக்கும் இரண்டாவது மாநில மாநாடு என்னைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.

நம் அரசியல் மற்றும் கொள்கை வழிப் பயணத்தைச் சற்றும் சமரசமின்றிச் செய்வோம். அதனை உறுதிப்படுத்த செயல்மொழிதான் நம் அரசியலுக்கான தாய்மொழி என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

நம் மீது வீசப்படும் விமர்சனங்களில் நல்லவற்றை மட்டும் நமதாக்கி உரமேற்றுவோம். அல்லவை அனைத்தையும் புறந்தள்ளிப் புன்னகைப்போம். மக்களோடு மக்களாக இணைந்து நிற்கும் மக்களரசியல் மட்டுமே, நமது நிரந்தர அரசியல் நிலைப்பாடு. மனசாட்சி உள்ள மக்களாட்சியை நிலைநாட்டுவது மட்டுமே நம் இலக்கு.

மக்களுடன் தோளோடு தோள் சேர்ந்து தொடர்ந்து பயணிப்போம். தூய அரசியல் அதிகார இலக்கை வெல்வோம்.

1967, 1977 தேர்தல் அரசியல் வெற்றி விளைவுகளை, வருகிற 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் நம் தமிழ் மக்கள் நமக்காக நிகழ்த்திக் காட்டப்போவது நிச்சயம்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார் விஜய்.

முன்னதாக, மாநாட்டில் பங்கேற்க வந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு இரங்கலையும் தெரிவித்திருந்தார்.

"நம் மீது தீராப் பற்று கொண்ட கழகத் தோழர்கள் செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதிக் கழக நிர்வாகி R.பிரபாகரன், நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கேம்ப் லைன் K.ரித்திக் ரோஷன், விருதுநகர் மாவட்டம், இனாம் கரிசல்குளம் கிளைக் கழக நிர்வாகி K. காளிராஜ் ஆகியோர் மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற்கு முன்பும் பின்பும் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

நம் கழகத்திற்கான இவர்களது பற்றுறுதியும் பங்களிப்பும் என்றென்றும் நம் நினைவில் நிற்கும். அவர்கள் விரும்பிய இலட்சிய சமுதாயத்தை நாம் படைத்துக் காட்டுவோம். கழகத் தோழர்களைப் பிரிந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காலமான கழகத் தோழர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். அவர்களின் குடும்பங்களுக்கு நம் கழகம் உறுதுணையாக இருக்கும்" என்று எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

TVK Vijay | TVK | TVK Maanadu | Vijay | Actor Vijay | TVK Chief Vijay | Madurai Maanadu |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in