அரசியல் செயல்பாடுகள் மீண்டும் ஆரம்பம்: தவெகவின் புதிய நிர்வாகக் குழுவை அமைத்த விஜய்! | TVK Vijay | TVK |

புதிய நிர்வாகக் குழுவில் மொத்தம் 28 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.
புதிய நிர்வாகக் குழுவில் மொத்தம் 28 பேர் இடம்பெற்றுள்ளார்கள்.
கோப்புப்படம்
2 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்.

நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் பனையூரில் நாளை (அக்டோபர் 29) அன்று கூடுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை மேற்கொண்டார். இதில் கூட்டநெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தார்கள்.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக பெரிய செயல்பாடுகள் எதிலும் ஈடுபடாமல் இருந்தது. எந்தவொரு அரசியல் நிகழ்வு குறித்தும் கருத்து தெரிவிக்காமல் இருந்தது.

பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கரூர் சென்று நேரில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து நட்சத்திர விடுதியில் சந்தித்து நேற்று ஆறுதல் கூறினார் விஜய்.

கரூர் சம்பவத்துக்குப் பிறகு பெரிய நிசப்தம் நிலவி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்த பிறகு தவெக மீண்டும் அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கரூர் துயரச் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார் தவெக தலைவர் விஜய். தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப்போல மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என விஜய் இன்று மாலை அறிக்கை வெளியிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க புதியதாக நிர்வாகக் குழு நியமிக்கப்படுகிறது என்று விஜய் அறிவிப்பொன்றை வெளியிட்டார்.

பொதுச்செயலாளர் என். ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ், இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், ராஜ்மோகன், என். மரிய வில்சன் உள்பட மொத்தம் 28 பேர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.

"எனது வழிகாட்டுதலின்படி இயங்கும் இந்தப் புதிய நிர்வாகக் குழுவுக்குக் கழகத்தின் பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று விஜய் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, நிர்வாகக் குழு சார்ந்து புதிய அறிவிப்பொன்றை பொதுச்செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

"தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10 மணிக்கு பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" என்று என். ஆனந்த் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Tamilaga Vettri Kazhagam (TVK) president Vijay has announced the formation of a new administrative committee, following which the party’s General Secretary has called for a meeting.

TVK | TVK Vijay | N Anand | Vijay |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in