அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய் அறிக்கை

"வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் திமுக அரசு ஏமாற்றியுள்ளது."
கோப்புப்படம்
கோப்புப்படம்
2 min read

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்பட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ (அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பு) கூட்டமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.

மறியல் போராட்டத்தை அறிவித்திருந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், தமிழக நிதிநிலை அறிக்கையின் தாக்கலுக்காகக் காத்திருந்தார்கள். அதிலும் ஏமாற்றமே மிஞ்சியதால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததன்படி இன்று மாவட்டத் தலைநகரங்களில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பினருக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் "ஜாக்டோ ஜியோ போராட்டம் என்பது, தமிழகத்தில் வாழ்ந்து வரும் லட்சக்கணக்கான குடும்பங்கள் சார்ந்த நல்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த போராட்டம். இதை அரசியல் கண்கொண்டோ, ஆட்சி அதிகாரக் கண்கொண்டோ நோக்கவே கூடாது. முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் மட்டுமே அணுக வேண்டும்.

2021-ல் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மட்டும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பைக் கெஞ்சிக் கூத்தாடியும், பழை ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றும் கூறி, தேர்தல் அறிக்கையிலும் 309-வது வாக்குறுதியாக வெளியிட்டு நம்பிக்கையை ஏற்படுத்திவிட்டு, இப்போது அவர்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் லட்சக்கணக்கான குடும்பங்களை இந்தத் திமுக அரசு ஏமாற்றியுள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பாக முழுமையான மனப்பூர்வமான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று விஜய் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in