நவம்பர் 5-ல் தவெக சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம்: விஜய் அழைப்பு | TVK Vijay | Vijay |

"கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில் தான், நமது அடுத்த அடியை..."
TVK Chief Vijay Calls for Special General Body Meeting on November 5
தவெக தலைவர் விஜய் (கோப்புப்படம்)ANI
2 min read

தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்க நவம்பர் 5 அன்று சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் கூடவுள்ளதாக அக்கட்சித் தலைவர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27 அன்று மக்களைச் சந்திக்கும் பிரசாரக் கூட்டத்தை கரூரில் மேற்கொண்டார். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட மொத்தம் 41 பேர் உயிரிழந்தார்கள்.

இந்தத் துயரச் சம்பவத்துக்குப் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிச் செயல்பாடுகள் எதுவும் பெரிதளவில் நடக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சென்று சந்திப்பார் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறினார்.

இதன்பிறகு தான் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் முழு வீச்சில் செயல்படத் தொடங்கியது. விவசாயிகளின் நெல்கொள்முதல் பிரச்னை தொடர்பாக அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார். பிறகு, தவெகவின் புதிய நிர்வாகக் குழுவை அமைத்தார் விஜய்.

தவெக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று காலை பனையூரில் கூடியது. இதைத் தொடர்ந்து தான் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடரமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது.

சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதிலும்', அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு, நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது.

இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக் கொண்டிருக்கிறார்கள். சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளார்கள்.

கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில் தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்தக்கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவாதிக்க வேண்டும்.

ஆகவே, இவை குறித்து முடிவுகள் எடுக்கும் பொருட்டு, கழகத்தின் இதயமான பொதுக்குழுவின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட முடிவு செய்துள்ளோம். அதன்படி, வருகிற 5.11.2025 புதன்கிழமை அன்று, நம் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஹோட்டலில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

வாருங்கள், சிறப்புப் பொதுக்குழுவில் கூடுவோம். வருங்காலம் நமதென்று காட்ட, தீர்க்கமாகத் திட்டமிடுவோம்.

நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Summary

TVK President Vijay has convened Party's Special General Body Meeting on November 5.

General Body Special Meeting | General Body Meeting | TVK Vijay | Vijay | TVK | Tamilaga Vettri Kazhagam |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in