

எம்ஜிஆர் எவ்வழியில் சென்றாரோ அதே வழியில்தான் விஜய் செல்கிறார் என்று தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், விஜய் முன்னிலையில் நேற்று (நவ.27) தவெகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதுகுறித்த அறிக்கை நேற்று மாலையில் வெளியானது. இதையடுத்து இன்று சென்னையிலிருந்து செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்திற்குப் புறப்பட்டார். அதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தற்போது கோபிசெட்டிபாளையம் செல்கிறேன். கலந்து கொள்ள வேண்டிய திருமண நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவற்றை முடித்துக்கொண்டு டிசம்பர் 1 அன்று மீண்டும் சென்னை திரும்புவேன். என்னிடம் ஒரு கேள்வி தொடர்ந்து கேட்கப்படுகிறது. அது, எம்ஜிஆர் போல் விஜயைப் பார்க்கிறீர்களா என்பது. முதன் முதலில் எம்ஜிஆர் அதிமுக என்ற இயக்கத்தை தொடங்கிய போது, படங்களைப் போல் 100 நாள் தான் ஓடும் என்று சொன்னார்கள். ஆனால் அவருடைய ஆட்சி என்பது இறுதிவரை வெல்ல முடியாத ஆட்சியாக அமைந்தது. வரலாறு படைத்த தலைவராக 10,000 கி.மீட்டருக்கு அப்பால் இருந்தபோதும் தமிழ்நாட்டில் வெற்றி பெற்றார்.
இன்று விஜயைப் பொறுத்தவரையிலும், எம்ஜிஆர் எவ்வழியில் சென்றாரோ அதே வழியில் தனது பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். தனது வாகனத்தில் கூட அண்ணா, எம்ஜிஆரின் உருவப் படங்களை வைத்திருக்கிறார். விஜய் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு அரசியல் பணியாற்றி வருகிறார். இவரது பயணம் வெற்றி பெறும்.” என்றார்.
TVK Chief Coordinator Sengottaiyan said that Vijay is going the same way as MGR.