தவெகவில் 6-ம் கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்

இதுவரை மொத்தம் 114 மாவட்டங்களுக்குச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
தவெகவில் 6-ம் கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்
படம்: https://x.com/TheRoute
1 min read

தமிழக வெற்றிக் கழகத்தில் 6-ம் கட்டமாக 19 மாவட்டங்களுக்குச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழக வெற்றிக் கழகம், கட்சியின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு கட்சியின் அமைப்பானது சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு கடந்த ஜனவரி 24 முதல் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஜனவரி 24 அன்று முதலில் 19 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதன்பிறகு ஜனவரி 29, ஜனவரி 31, பிப்ரவரி 1, பிப்ரவரி 2 ஆகிய நாள்களில் தலா 19 மாவட்டங்களுக்குச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

இதன் தொடர்ச்சியாக தற்போது 6-ம் கட்டமாக மேற்கொண்டு 19 மாவட்டங்களுக்குச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை மொத்தம் 114 மாவட்டங்களுக்குச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

செங்கல்பட்டு வடக்கு, ராமநாதபுரம் மேற்கு, சென்னை மத்தியம் (மேற்கு), சென்னை மத்தியம் (தெற்கு), சென்னை தெற்கு (மேற்கு), செங்கல்பட்டு வடமேற்கு, தருமபுரி கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை வடக்கு (தெற்கு), சென்னை வடக்கு (கிழக்கு), திருவள்ளூர் தென்மேற்கு, திருவள்ளூர் தென்கிழக்கு, திருவள்ளூர் தெற்கு, திருப்பூர் மாநகர், விருதுநகர் தென்மேற்கு, மதுரை புறநகர், பெரம்பலூர், நீலகிரி மேற்கு, திருவள்ளூர் மத்திய மாவட்டம் என 19 மாவட்டங்களுக்கு இன்று செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்டச் செயலாளர், மாவட்ட இணைச் செயலாளர், பொருளாளர், துணைச் செயலாளர்கள் இருவர் என பொறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர செயற்குழு உறுப்பினர்கள் என 10 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் கட்சி நிர்வாகிகளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதில் சென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலாளராக விஜயின் முன்னாள் ஓட்டுநரும் தற்போதைய உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் சபரிநாதன் நியமிக்கப்பட்டது பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in