

தவெக பொதுச் செயலாளார் என். ஆனந்த் முன்ஜாமின் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைச் செயலாளர் சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் துணை பொதுச் செயலாளர் சி.டி. நிர்மல்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் மீண்டும் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் இருவர் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் அந்த மனுவின் மீதான விசாரணைக்கு முன்பே, கடந்த அக்டோபர் 13 அன்று கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கும் சிபிஐ வசம் மாறி, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று கரூர் சம்பவம் தொடர்பான 6 மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது சிபிஐ வசம் தற்போது வழக்கு சென்றிருப்பதால், எதிர் மனுதாரராக கரூர் காவல்துறையினரைச் சேர்த்த முன்ஜாமின் மனுவைத் திரும்பப் பெறுவதாக என். ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி அளித்த நீதிபதி, முன்ஜாமின் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
The anticipatory bail petition filed by TVK General Secretary N. Anand was dismissed by the Chennai High Court.